நாங்க ஜெயிச்சதுலாம் கூட பெரிய விஷயம் இல்ல.. ஜெயிச்ச விதம்தான் சிறப்பு.. கேப்டன் கோலி நெகிழ்ச்சி

By karthikeyan VFirst Published Dec 23, 2019, 11:33 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி  2-1 என ஒருநாள் தொடரை வென்றது. 
 

கட்டாக்கில் நடந்த கடைசி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 315 ரன்களை குவித்து 316 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் இணைந்து அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு, ஒருமுனையில் விராட் கோலி நிலைத்து நிற்க, மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ் ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கோலி மீதான அழுத்தம் அதிகமானது. ஆனாலும் வழக்கம்போலவே அந்த அழுத்தத்தை சிறப்பாக கையாண்ட சேஸிங் மாஸ்டர் விராட் கோலி, தேவையான ரன்ரேட் அதிகமாகிவிடாமல், சீரான வேகத்தில் ஸ்கோரும் செய்துகொண்டு, தனது விக்கெட்டையும் இழந்துவிடாமல் சிறப்பாக ஆடினார்.

வழக்கமாக இதுபோன்ற போட்டிகளை கடைசி வரை நின்று ஜெயித்து கொடுக்கும் கோலி, நேற்று அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும் ஜடேஜா களத்தில் செட்டில் ஆகியிருந்ததால், கோலி சற்று தைரியத்துடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷர்துல் தாகூர் பயமோ பதற்றமோ அடையாமல், பெரிய ஷாட்டுகளை ஆடினார். இதையடுத்து ஜடேஜாவும் ஷர்துல் தாகூரும் இணைந்து 49வது ஓவரிலேயே இலக்கை எட்டினர். 

இதையடுத்து இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, நிறைய முறை இதுபோன்ற போட்டிகளில் இலக்கை விரட்டியிருப்பதால் நிதானமும் பொறுமையும் இயல்பாக வந்துவிட்டது. இதுபோன்ற பெரிய இலக்கை விரட்டும்போது சிறிய சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து 35 ரன்கள், 45 ரன்கள் என சேர்ப்பது எதிரணியின் நம்பிக்கையை நொறுக்கும். ஷர்துல் தாகூரும் ஜடேஜாவும் இணைந்து போட்டியை வெற்றிகரமாக முடித்ததை பார்க்க நன்றாக இருந்தது. அவர்கள் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்தது தான் பெரிய விஷயம். நான் அவுட்டாகி செல்லும்போது, கொஞ்சம் பதற்றமாக இருந்தது. ஆனால் ஜடேஜா நம்பிக்கையுடன் நிற்பதை கண்டு நானும் நம்பிக்கையடைந்தேன் என்று கோலி தெரிவித்துள்ளார். 
 

click me!