ஜெயசூரியாவின் 22 ஆண்டுகால ரெக்கார்டை தகர்த்தெறிந்த ரோஹித் சர்மா

By karthikeyan VFirst Published Dec 23, 2019, 10:41 AM IST
Highlights

இலங்கையின் முன்னாள் கேப்டனும் அதிரடி தொடக்க வீரருமான சனத் ஜெயசூரியாவின்  22 ஆண்டுகால பேட்டிங் சாதனையை தகர்த்தெறிந்துள்ளார் ரோஹித் சர்மா. 
 

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 316 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 49வது ஓவரில் எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. 

316 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் - ராகுல் இருவருமே அரைசதம் அடித்தனர். களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த ரோஹித் சர்மா 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விராட் கோலி மற்றும் ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. 

இந்த போட்டியில் 63 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, ஜெயசூரியாவின் 22 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இந்த ஆண்டில்(2019) மட்டும் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில், 2445 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு ஆண்டில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான ரன்களை குவித்த தொடக்க வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1997ல் இலங்கை அணியின் தொடக்க வீரர் ஜெயசூரியா 2379 ரன்களை குவித்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. ஜெயசூரியாவின் அந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். 

ரோஹித் சர்மாவிற்கு 2019ம் ஆண்டு மிகச்சிறப்பானதாக அமைந்தது. உலக கோப்பையில் 5 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கி, தனது முதல் இரட்டை சதத்தை அடித்ததோடு, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்தது, ஐபிஎல் கோப்பையை வென்றது, இந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான ரன்களை குவித்தது என பல சாதனைகளை செய்துள்ளார் ரோஹித் சர்மா.

click me!