குணதிலகாவின் அபார சதம் வீண்.. இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Oct 3, 2019, 10:09 AM IST
Highlights

பாகிஸ்தான் - இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2-0 என தொடரை வென்றது. 
 

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குணதிலகா அபாரமாக ஆடினார். ஃபெர்னாண்டோ, திரிமன்னே, பெரேரா பானுகா என ஒருமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும் மறுமுனையில் களத்தில் நிலைத்து நின்று தெளிவாக ஆடி சதமடித்த குணதிலகா, விக்கெட் வீழ்ச்சியால் அணியின் ஸ்கோர் தடைபட்டுவிடாமல் பார்த்துக்கொண்டார். 

சிறப்பாக விளையாடிய குணதிலகா, 134 பந்துகளில் 133 ரன்களை குவித்து 45வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஷனாகா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 43 ரன்களை குவிக்க, இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 297 ரன்களை குவித்தது. 

298 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகார் ஜமான் மற்றும் அபித் அலி ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்ததுடன் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்களை குவித்தனர். அபித் அலி 74 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த பாபர் அசாம் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஃபகார் ஜமான் 76 ரன்களில் அவுட்டானார்.

கேப்டன் சர்ஃபராஸ் அகமது இந்த போட்டியிலும் சோபிக்கவில்லை. 23 ரன்களில் சர்ஃபராஸ் ஆட்டமிழந்தார். ஹாரிஸ் சொஹைல் இந்த போட்டியிலும் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து 56 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி வெற்றிக்கு அருகில் நெருங்கிய நிலையில், ஹாரிஸ் சொஹைல் ஆட்டமிழந்தார். இதையடுத்து 49வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸரும் பவுண்டரியும் விளாசி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, ஒருநாள் தொடரை 2-0 என வென்றது. 
 

click me!