சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் அபாரம்.. மும்பை அணி வெற்றி

By karthikeyan VFirst Published Oct 1, 2019, 5:16 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரின் பொறுப்பான மற்றும் சிறப்பான பேட்டிங்கால் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

விஜய் ஹசாரே தொடரில் மும்பை மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சவுராஷ்டிரா அணி, 50 ஓவரில் 245 ரன்கள் அடித்தது. 

சவுராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக, ஷெல்டான் ஜாக்சனும் சமர்த் வியாசும் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். 39 ரன்கள் அடித்த வியாசும் 35 ரன்கள் அடித்த ஜாக்சனும் ஒரே ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வசவடா பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து 59 ரன்களை சேர்த்தார். சிராக் ஜானி தன் பங்கிற்கு 40 ரன்களை சேர்க்க, சவுராஷ்டிரா அணி 50 ஓவரில் 245 ரன்கள் அடித்தது. 

246 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க பிஸ்டா 2 ரன்னிலும் அவரைத்தொடர்ந்து மூன்றாவது வீரராக இறங்கிய சித்தேஷ் லத் ரன்னே எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து நான்காம் வரிசையில் இறங்கி தொடக்க வீரர் ஆதித்ய தரேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, அதிரடியாக ஆடி ஸ்கோரையும் உயர்த்தினார். 

அதிரடியாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்தும் தனது அதிரடியை தொடர்ந்தார். ஒருமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடி ஸ்கோர் செய்ய, மறுமுனையில் தரே நிதானமாக ஆடினார். தரே 29 ரன்களில் அவுட்டாக, அதற்கு இரண்டு ஓவர்கள் கழித்து ஷ்ரேயாஸ் ஐயரும் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினார். ஷிவம் துபே 9 ரன்களில் நடையை கட்ட, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷுபம் ரஞ்சன், சூர்யகுமாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடினார். சத்தீஸ்கர் அணிக்கு எதிராக தாறுமாறாக அடித்து ஆடி 31 பந்துகளில் 81 ரன்களை குவித்த சூர்யகுமார், இந்த போட்டியில் பொறுப்பை உணர்ந்து பொறுப்புடனும் அதேநேரத்தில் ஓரளவிற்கு அடித்தும் ஆடினார். சூர்யகுமார் 71 பந்துகளில் 85 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து மும்பை அணியை வெற்றி பெற செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடிய ரஞ்சன் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

48 ஓவரில் இலக்கை எட்டி மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் ஐயரும் சூர்யகுமார் யாதவும் பொறுப்புடனும் அபாரமாகவும் ஆடினர். 

click me!