Bangladesh vs Pakistan முதல் டி20: ஈசியான இலக்கை கஷ்டப்பட்டு அடித்து வெற்றி பெற்ற பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Nov 19, 2021, 7:26 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் அபாரமாக விளையாடி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று தொடரை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி.

3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு சென்றது. முதல் டி20 போட்டி இன்று தாக்காவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்கள் மட்டுமே அடித்தது.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் நயீம் மற்றும் சைஃப் ஹசன் ஆகிய இருவருமே வெறும் ஒரு ரன்னில் நடையை கட்டினர். அதன்பின்னர் ஷாண்டோவும் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அஃபிஃப் ஹுசைன் பொறுப்புடன் ஆடி 36 ரன்கள் அடித்தார். கேப்டன் மஹ்மதுல்லா வெறும் 6  ரன்னில் ஆட்டமிழந்தார்.

சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வங்கதேச அணி விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியின் ஸ்கோர் உயரவேயில்லை. பின்வரிசையில் நூருல் ஹசனும், மஹெடி ஹசனும் இணைந்து 4 சிக்ஸர்களை விளாச, வங்கதேச அணி 20 ஓவரில் 127 ரன்கள் அடித்தது. நூருல் ஹசன் 22 பந்தில் 28 ரன்களும், மஹெடி ஹசன் 20 பந்தில் 30 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 128 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் (7) மற்றும் முகமது ரிஸ்வான் (11) ஆகிய இருவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஃபகர் ஜமான் ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் ஹைதர் அலி மற்றும் ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் டக் அவுட்டாகினர். பொறுப்புடன் நிலைத்து ஆடிய ஃபகர் ஜமானும் 34 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் குஷ்தில் ஷாவும் ஷதாப் கானும் இணைந்து பொறுப்புடன் ஆடி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியை நகர்த்தி சென்றனர்.

17வது ஓவரில் குஷ்தில் ஷா 34 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த முகமது நவாஸ் 8 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் அடிக்க, 128 ரன்கள் எளிய இலக்கை கடைசி ஓவரில் அடித்து வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

128 ரன்கள் எளிதான இலக்குதான் என்றாலும், பாகிஸ்தான் அணியால் அதை எளிதாக அடிக்க முடியவில்லை. குஷ்தில் ஷா - ஷதாப் கானின் பார்ட்னர்ஷிப்பால் பாகிஸ்தான் அணி போராடி வெற்றி பெற்றது.
 

click me!