தட்டு தடுமாறி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Jun 30, 2019, 10:17 AM IST
Highlights

45வது ஓவர் வரை ஆஃப்கானிஸ்தான் கையில் தான் ஆட்டம் இருந்தது. 45 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 46வது ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. 

உலக கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றி கட்டாயத்தில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, தட்டு தடுமாறி கடைசி ஓவரில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. 

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆஃப்கான், இக்ரம் அலி கில், ஜட்ரான் ஆகியோர் நன்றாக தொடங்கினர். ஆனால் களத்தில் நிலைத்த அவர்கள், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் தவறான நேரங்களில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. 250 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டிய வாய்ப்பை பெற்றிருந்த ஆஃப்கானிஸ்தான் அணி 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

228 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் முதல் ஓவரிலேயே முஜீபுர் ரஹ்மானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் இமாம் உல் ஹக்கும் பாபர் அசாமும் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த அவர்கள் இருவரையுமே முகமது நபி தனது சுழலில் வீழ்த்தினார். 

அதன்பின்னர் சீரான இடைவெளியில் ஹஃபீஸ், ஹாரிஸ் சொஹைல், கேப்டன் சர்ஃபராஸ் ஆகியோர் ஆட்டமிழக்க, ஆட்டம் ஆஃப்கானிஸ்தானின் பக்கம் திரும்பியது. இமாத் வாசிம் களத்திற்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே ரஷீத் கானின் சுழலில் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. ரிவியூவும் இல்லாததால் அவரது விக்கெட் வாய்ப்பை ஆஃப்கானிஸ்தான் இழந்தது. ஆனால் அப்போது ஆஃப்கானிஸ்தானுக்கு தெரிந்திருக்காது. அவர்தான் கடைசியில் போட்டியை மாற்ற போகிறார் என்று.. 

45வது ஓவர் வரை ஆஃப்கானிஸ்தான் கையில் தான் ஆட்டம் இருந்தது. 45 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 46வது ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. ஆஃப்கானிஸ்தான் கேப்டன் குல்பாதின் நைப் வீசிய அந்த ஓவரில் ஒரு கேட்ச்சை அஸ்கர் ஆஃப்கான் தவறவிட்டார். அதுமட்டுமல்லாமல் நைபின் அந்த ஓவரில் 18 ரன்கள் அடிக்கப்பட்டது. அந்த ஓவர் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிவிட்டது. அதன்பின்னர் 47,48,49 ஆகிய ஓவர்களை ஸ்பின்னர்கள் மீண்டும் கட்டுக்கோப்பாக வீச, கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் அதை எளிதாக அடித்து வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

இந்த வெற்றியை அடுத்து 9 புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான், இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளிவிட்டு நான்காமிடத்தை பிடித்தது. ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது பாகிஸ்தான். 

இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று இந்திய அணியை எதிர்கொள்கிறது. 
 

click me!