2வது இன்னிங்ஸில் சட்டு புட்டுனு சோலியை முடித்த இங்கிலாந்து..! அருமையான வாய்ப்பை அம்போனு விட்ட பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Aug 8, 2020, 4:23 PM IST
Highlights

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட முன்னிலை பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, 2வது இன்னிங்ஸில் வெறும் 169 ரன்களுக்கு சுருண்டு, வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.
 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, ஷான் மசூத்தின் அபாரமான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை அடித்தது. ஷான் மசூத் அதிகபட்சமாக 156 ரன்களும் பாபர் அசாம் 69 ரன்களும் அடித்தனர். ஷதாப் கான் தன் பங்கிற்கு 46 ரன்கள் அடித்தார். அவரது இன்னிங்ஸ் மிக முக்கியமானது. ஷான் மசூத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஷதாப் கான் சிறப்பாக ஆடினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர மற்றும் சீனியர் வீரர்களான ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஏமாற்றமளித்தனர். தொடக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டாக, ஜோ ரூட்டும் 16 ரன்களில் வெளியேறினர். இளம் வீரர் ஓலி போப் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவரும் 62 ரன்களில் ஆட்டமிழக்க, பட்லர் 38 ரன்கள் மற்றும் வோக்ஸ் 19 ரன்களில் அவுட்டாகினர். கடைசி நேரத்தில் வழக்கம்போலவே ஸ்டூவர்ட் பிராட் தனது அதிரடியான பேட்டிங்கால் சில பவுண்டரிகளை அடித்து 29 ரன்கள் சேர்த்து கொடுத்தார். அதனால் தான் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களையே கடந்தது. முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கே சுருண்டது இங்கிலாந்து.

முதல் இன்னிங்ஸ் முடிவில் 107 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 250-300 ரன்கள் அடித்தாலே வெற்றி பெறக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் படுமோசமாக சொதப்பினர் பாகிஸ்தான் வீரர்கள். 

முதல் இன்னிங்ஸில் ஸ்கோர் செய்த ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவருமே இந்த முறை ஏமாற்றினர். முதல் இன்னிங்ஸில் சதமடித்து பெரிய இன்னிங்ஸை ஆடிய ஷான் மசூத், 2வது இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராடின் பவுலிங்கில் டக் அவுட்டானார். 

மற்றொரு தொடக்க வீரரான அபித் அலி 20 ரன்களிலும் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் அசார் அலி 18 ரன்களில் நடையை கட்டினார். அபித் அலி டோமினிக் பெஸ்ஸின் சுழலில் அவுட்டாக, பாபர் அசாம் மற்றும் அசார் அலியை கிறிஸ் வோக்ஸ் வீழ்த்தினார். ஆசாத் ஆஷிக் 29 ரன்களிலும் முகமது ரிஸ்வான் 27 ரன்களிலும் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் அடித்த ஷதாப் கானை இம்முறை சோபிக்கவிடாமல் 15 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்த, 122 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்த  பாகிஸ்தான் அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்திருந்தது. நான்காம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடனும் வெற்றி வாய்ப்புடனும் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸில் வெறும் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், மொத்தமாக 276 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான், 277 ரன்களை இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் எஞ்சியிருப்பதால் இங்கிலாந்து அணி இந்த இலக்கை அடித்துவிடும் வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணி தங்களுக்கு இருந்த வெற்றி வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.
 

click me!