லேட்டா வரும் வீரர்களுக்கு இதுதான் தண்டனை!! தோனியின் அதிரடியால் தடுக்கப்பட்ட தாமதம்.. சுவாரஸ்ய சம்பவம்

By karthikeyan VFirst Published May 15, 2019, 11:54 AM IST
Highlights

தோனியின் கேப்டன்சி திறன், பேட்டிங் - விக்கெட் கீப்பிங் திறன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு நகைச்சுவை உணர்வு, சமயோசித மற்றும் சாமர்த்தியமான யோசனைகள், சிந்தனைகளுக்கும் பெயர்போனவர் தோனி. 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனான தோனி, மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர். 

கேப்டன்சியிலிருந்து விலகி தற்போது விராட் கோலி தலைமையிலான அணியில் சீனியர் வீரராக ஆடிவருகிறார். தோனி கேப்டனாக இல்லையென்றாலும் நெருக்கடியான நிலைகளிலும் முக்கியமான தருணங்களிலும் அவரது ஆலோசனையின் படிதான் அணி செயல்படுகிறது. 

தோனியின் கேப்டன்சி திறன், பேட்டிங் - விக்கெட் கீப்பிங் திறன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு நகைச்சுவை உணர்வு, சமயோசித மற்றும் சாமர்த்தியமான யோசனைகள், சிந்தனைகளுக்கும் பெயர்போனவர் தோனி. பலமுறை அவரது சாமர்த்தியமான பேச்சை பார்த்திருக்கிறோம். 

தோனி கேப்டனாக இருந்தபோது, அப்படியான ஒரு சமயோசித யோசனையை அவர் தெரிவித்தது குறித்துத்தான் பார்க்கப்போகிறோம். இந்திய அணியின் முன்னாள் மனவள பயிற்சியாளர் பாடி அப்டன், ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் தோனி கூறிய சமயோசித யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாடி அப்டன் மனவள பயிற்சியாளராக வந்த சமயத்தில், கும்ப்ளே டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், தோனி ஒருநாள் அணியின் கேப்டனாகவும் இருந்தனர். அப்போது, வீரர்கள் பயிற்சிக்கும் ஆலோசனை கூட்டத்திற்கும் தாமதமாக வருவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தாமதமாக வரும் வீரர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என கேப்டன்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 

டெஸ்ட் அணியின் கேப்டனான கும்ப்ளே, தாமதமாக வரும் வீரர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கலாம் என்று பரிந்துரைத்தார். ஒருநாள் அணியின் கேப்டன் தோனி, ஒரு வீரர் தாமதமாக வந்தாலும் அனைத்து வீரர்களும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்பின்னர் ஒருநாள் அணி வீரர் ஒருவர் கூட தாமதமாக வரவில்லை என்று பாடி அப்டன் தெரிவித்துள்ளார்.

ஒரு அணியாக ஆடும் விளையாட்டுகளில் வீரர்கள் நல்ல டீம் பிளேயராக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்களை டீம் பிளேயர்களாக உருவாக்க வேண்டும். அந்த வகையில் தோனியின் யோசனை அபாரமானது. ஏனெனில் நம்மால் மற்றவர் பாதிக்கப்படக்கூடாது என்ற சிந்தனை ஒவ்வொரு வீரருக்கும் வரும். அதனால் தாமதமாக வருவது தடுக்கப்படும். அதற்காகத்தான் தோனி இப்படியான ஒரு தண்டனையை அறிவித்திருக்கிறார். அதற்கு பலன் கிடைத்தது சிறந்த விஷயம்.
 

click me!