
T20 World Cup Prize Money : கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றதற்காக ஐசிசி வழங்கிய பரிசுத் தொகையை வீரர்களுக்கு வழங்காமல் ஓமன் கிரிக்கெட் வாரியம் எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லீக் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஓமன், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடம்பெற்றிருந்த பிரிவில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. எனினும், லீக் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகளுக்கான பரிசுத் தொகையான ரூ.1,93,01,737-ஐ ஐசிசி ஓமன் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கியது.
ஐசிசி வழங்கிய பரிசுத் தொகையை 21 நாட்களுக்குள் வீரர்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஐசிசி பரிசுத் தொகையை வழங்கி ஒரு வருடம் ஆகியும், வீரர்களுக்கு இந்தத் தொகையை வழங்க ஓமன் கிரிக்கெட் வாரியம் இதுவரை முன்வரவில்லை. பரிசுத் தொகை வழங்கப்படாதது குறித்துப் புகார் அளித்த உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த 15 வீரர்களையும் அணியிலிருந்து படிப்படியாக நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பல அணிகளின் கிரிக்கெட் வாரியங்கள் பரிசுத் தொகையை முழுமையாக வீரர்களுக்கு வழங்கவில்லை. ஆனால், பரிசுத் தொகையில் ஒரு பைசா கூட வீரர்களுக்கு வழங்காத ஒரே கிரிக்கெட் வாரியம் ஓமன் கிரிக்கெட் வாரியம் மட்டுமே.
டி20 உலகக் கோப்பையில் ஓமன் அணிக்காக விளையாடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கஷ்யப் பிரஜாபதி உட்பட பல வீரர்கள் பரிசுத் தொகை கிடைக்காததால் நிதி நெருக்கடியில் உள்ளனர். புதிய வாழ்வாதாரத்தைத் தேடி அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார் பிரஜாபதி. ஐசிசி வழங்கும் பரிசுத் தொகையை கிரிக்கெட் வாரியங்கள் வீரர்களுக்கு வழங்குகின்றனவா என்பதை உறுதி செய்யும் எந்தவொரு அமைப்பும் இல்லாததே இதுபோன்ற பிரச்சினைக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.
2027 வரை ஐசிசி போட்டிகளில் விளையாடுவதற்காக வழங்கப்படும் பரிசுத் தொகையை வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் ஐசிசி ஒப்பந்தம் செய்திருந்தது. இதேபோன்ற ஒப்பந்தம் அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஓமன் அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களின் கோரிக்கை. கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வென்றது.