
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இதேபோல் ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். மற்றொரு தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தரும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் உள்ளூர் போட்டிகளில் அசத்தியதால் கருண் நாயர் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஷர்துல் தாக்கூருக்கும் மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன்
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் போட்டி லீட்ஸில் உள்ள யார்க்ஷயர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து ரன் மெஷின் கருண் நாயர் களமிறங்குகிறார்.
சாய் சுதர்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம்
4வது இடத்தில் கேப்டன் சுப்மன் கில் களம் காண்கிறார். 5வது இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்க வாய்ப்புள்ளது. 6வது இடத்தில் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் களம் காண்கிறார். ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா 7வது இடத்திலும், ஷர்துல் தாக்கூர் 8வது இடத்திலும் களமிறங்குகின்றனர். 9வது இடத்தில் ஜஸ்பிரித் பும்ராவும், 10வது இடத்தில் முகமது சிராஜும், 11வது இடத்தில் பிரசித் கிருஷ்ணாவும் களம் காண்கின்றனர்.
வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பில்லை
இந்திய அணியை பொறுத்தவரை முதல் டெஸ்ட்டில் 6 பேட்ஸ்மேன்கள், 2 ஆல்ரவுண்டர்கள், 3 பாஸ்ட் பவுலர்கள் என்ற விகிதத்தில் விளையாடுகிறது. ஒரு ஸ்பின்னராக ரவீந்திர ஜடேஜாவும், மீடியம் பாஸ்ட் பவுலராக ஷர்துல் தாக்கூரும் இடம் பெறுகின்றனர். மற்றொரு தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. இதேபோல் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்வுக்கும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், சுப்மன் கில், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.
இந்திய அணி வீரர்கள் முழு பட்டியல்:
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் முழு பட்டியல்: சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்.