ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்த மாதிரி நடத்தி பாருங்க.. சும்மா அனல் பறக்கும்.. சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆலோசனை

By karthikeyan VFirst Published Nov 6, 2019, 10:58 AM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இரண்டு இன்னிங்ஸ்களாக ஆடலாம் என்று சச்சின் டெண்டுல்கர் ஐடியா கொடுத்துள்ளார். 
 

டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இரண்டு இன்னிங்ஸ்களாக பிரித்து நடத்தப்படுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ஒரே மாதிரி நடத்தப்படுகின்றன. முதலில் ஒரு அணி பேட்டிங் ஆடும். பின்னர் அந்த அணி நிர்ணயித்த இலக்கை இரண்டாவதாக பேட்டிங் ஆடும் அணி விரட்டும். 

காலங்காலமாக இப்படி நடத்தப்பட்டுவரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரித்து நடத்தலாம் என்று சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு சச்சின் அளித்த பேட்டியில், ஒருநாள் போட்டிகளை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரித்து நடத்தலாம் என்பது என் கருத்து. 25 ஓவர்களாக பிரித்து இரண்டு இன்னிங்ஸ்கள் ஆடலாம். 15 நிமிடங்கள் இன்னிங்ஸ் பிரேக் விடலாம். 

டீம் ஏ மற்றும் டீம் பிக்கு இடையேயான போட்டி என்று வைத்துக்கொள்வோம். டீம் ஏ டாஸ் வென்று முதலில் 25 ஓவர்கள் பேட்டிங் ஆடவேண்டும். 15 நிமிடம் பிரேக் விட்டு, டீம் பி 25 ஓவர்கள் ஆடவேண்டும். அதன்பின்னர் மீண்டும் டீம் ஏ எஞ்சிய 25 ஓவர்களை ஆடிவிட்டு, பின்னர் டீம் பி 25 ஓவர்களை ஆடலாம். ஒருவேளை டீம் ஏ முதல் 25 ஓவர்களுக்கு உள்ளாகவே ஆல் அவுட்டாகிவிட்டால், டீம் பி 25 ஓவர்கள் ஆடிவிட்டு 15 நிமிட பிரேக்கிற்கு பின்னர் மீண்டும் அடுத்த 25 ஓவர்களை ஆடலாம். 

ஏனெனில், 50 ஓவர்கள் முழுமையாக நடத்தப்படும்போது, பகலிரவு ஆட்டங்களில் பனிப்பொழிவு முக்கிய பங்காற்றுகிறது. பகலிரவு ஆட்டங்கள் பெரும்பாலும் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாகவே முடிந்துவிடுகிறது. ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருப்பதால் பவுலர்களுக்கு பந்துவீசுவது கடினமாகிறது. பந்து வழுக்கிக்கொண்டு செல்வதால், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடும் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் எளிதாகிறது. அதனால் போட்டி ஒருதலைபட்சமாக முடிகிறது. இரண்டு இன்னிங்ஸ்களாக பிரித்து நடத்தும்போதுதான் உண்மையான போட்டியாக அமையும் என்று சச்சின் தெரிவித்துள்ளார். 

click me!