இந்திய அணிக்கு மரண பயத்தை காட்டிய நிகோலஸ் பூரான்.. விழிபிதுங்கி நின்ற விராட்.. மானத்தை காப்பாற்றிய ஷமி

By karthikeyan VFirst Published Dec 19, 2019, 10:27 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், நிகோலஸ் பூரான் களத்தில் அதிரடியாக ஆடியபோது இந்திய வீரர்கள் கலக்கமடைந்தனர். 
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 387 ரன்களை குவித்தது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே நிதானமாக தொடங்கி, பின்னர் அதிரடியாக ஆடி களத்தில் நிலைத்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை பூர்த்தி செய்ய, அவரை தொடர்ந்து ராகுலும் சதமடித்தார். 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 227 ரன்களை குவித்தனர். 37வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதிரடியாக ஆடி, இரட்டை சதத்தை நோக்கி பயணித்த ரோஹித் சர்மா, 159 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை வெளுத்து வாங்கிவிட்டனர். அல்ஸாரி ஜோசப் வீசிய 45வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசிய ரிஷப் பண்ட், கோட்ரெல் வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களை குவித்தார். ரோஸ்டான் சேஸ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை வைடாக வீச, அதற்கு சிங்கிள் எடுக்கப்பட்டது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் ரிஷப் சிங்கிள் எடுத்தார். அந்த ஓவரில் அடுத்த 5 பந்துகளை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் குவிக்கப்பட்டது. 

கீமோ பால் வீசிய 48வது ஓவரில் ரிஷப் பண்ட்டும் 49வது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் 16 பந்தில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 32 பந்தில் 53 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் 3 பவுண்டரிகளை விளாச, இந்திய அணி 50 ஓவரில் 387 ரன்களை குவித்தது. 

388 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஹெட்மயர் மற்றும் ரோஸ்டான் சேஸ் ஆகிய இருவரும் தலா 4 ரன்களுக்கு நடையை கட்டினர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் ஷாய் ஹோப் நிலைத்து நின்று ஆடினார். சேஸின் விக்கெட்டுக்கு பிறகு ஹோப்புடன் ஜோடி சேர்ந்தார் பூரான். ஷாய் ஹோப், தனது வழக்கமான பாணியில் மெதுவாக ஆடாமல், ஸ்கோர் அதிகம் என்பதால் வேகமாக ரன் சேர்த்தார். அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த பூரான், இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி பயம் காட்டினார். 

ஜடேஜா வீசிய 22வது ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்த பூரான், ஜடேஜாவின் அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். ஜடேஜா வீசிய 26வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார். ஷமி வீசிய 28வது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் பூரான். பூரானின் அதிரடியால் 28வது ஓவரிலேயே 180 ரன்களை கடந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

பூரான் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டை மட்டும் இழக்காமல் ஆடினால் இலக்கை அடித்துவிடலாம் என்ற நிலை இருந்தது. அது இந்திய வீரர்களின் முகத்திலேயே எதிரொலித்தது. அதுவரை மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த கேப்டன் கோலி, பூரானின் அதிரடியை கண்டு சற்று பதற்றமடைந்தார். அதிரடியை தொடர்ந்த பூரான், குல்தீப் வீசிய 29வது ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் அடித்தார். பூரான் அல்லது ஷாய் ஹோப் ஆகிய இருவரில் ஒருவரை வீழ்த்தி அந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேண்டிய கட்டாயம் இருந்த சூழலில், 28வது ஓவரில் ஷமியை மீண்டும் கொண்டுவந்தார் கேப்டன் கோலி. ஷமியின் 28வது ஓவரிலும் பூரான் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்தார். ஓவருக்கு ஓவர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மளமளவென ஸ்கோர் செய்து கொண்டிருந்த பூரானை, 30வது ஓவரில் ஷமி, அபாரமான பவுன்ஸரின் மூலம், 47 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்த பூரானை வீழ்த்தினார். அடுத்த பந்திலேயே பொல்லார்டையும் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷமி. 

இதையடுத்து ஷாய் ஹோப், ஹோல்டர், அல்ஸாரி ஜோசப் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். 9வது விக்கெட்டுக்கு கீமோ பாலும் பியெரும் இணைந்து நன்றாக ஆடினர். பியெரை 21 ரன்களில் ஜடேஜா வீழ்த்த, கீமோ பாலை துல்லியமான யார்க்கரில் வீழ்த்தினார் ஷமி. 280 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டானதையடுத்து 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!