கப்டில், கிராண்ட்ஹோம் காட்டடி.. சட்டுபுட்டுனு சோலியை முடித்த நியூசிலாந்து.. ஒருநாள் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ்

By karthikeyan VFirst Published Feb 11, 2020, 3:20 PM IST
Highlights

கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, இந்திய அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றுள்ளது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி 2-0 என தொடரை ஏற்கனவே வென்ற நிலையில், கடைசி போட்டி மவுண்ட் மாங்கனூயில் இன்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 296 ரன்களை அடித்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் இந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. 2வது ஓவரிலேயே மயன்க் அகர்வால் ஜாமிசனின் பந்தில் வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார். இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் கோலியும் 12 ரன்னில் நடையை கட்டினார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் பிரித்வி ஷா, சிறப்பாக அடித்து ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடினார். பிரித்வி ஷாவிற்கு ஷாட்டுகள் சிறப்பாக கனெக்ட் ஆகின. எனவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடித்து கொண்டிருந்த பிரித்வி ஷா, 40 ரன்னில் அவசரப்பட்டு ரன் அவுட்டானார். 

இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயருடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். பொறுப்புடன் முதிர்ச்சியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், நீஷமின் பந்தில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ராகுலுடன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய ராகுலும் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னர் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார் ராகுல். ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மனீஷ் பாண்டேவும் சிறப்பாக ஆடினார். மிடில் ஓவர்களில் எப்படி ஆடவேண்டுமோ அப்படி ஆடினர் இருவரும். சிறப்பாக ஆடிய ராகுல், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். 

ராகுலும் மனீஷ் பாண்டேவும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்களை சேர்த்தனர். சதமடித்த ராகுல், பென்னெட்டின் பந்தில் 112 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவர் அவுட்டான அடுத்த பந்தே மனீஷ் பாண்டேவும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் 6 பந்தில் 7 ரன் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஜடேஜாவும் சைனியும் ஆளுக்கு தலா ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 12 ரன் கிடைத்தது. எனவே இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 296 ரன்களை அடித்தது.

297 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில், ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். கப்டில் அதிரடியாக ஆடியதால், மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரரான நிகோல்ஸ், ரிஸ்க் எடுக்காமல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வேலையை மட்டும் பார்த்தார்.  அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கப்டில், 46 பந்தில் 66 ரன்களை குவித்து சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார். 

முதல் விக்கெட்டுக்கு கப்டிலும் நிகோல்ஸூம் இணைந்து 106 ரன்களை குவித்தனர். இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 22 ரன்களில் சாஹலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து ரோஸ் டெய்லர் 12 ரன்களிலும், அரைசதம் அடித்த நிகோல்ஸ் 80 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் டாம் லேதமும் ஜேம்ஸ் நீஷமும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த வேளையில், நீஷமின் விக்கெட்டையும் வீழ்த்தினார் சாஹல். நீஷம் அவுட்டாகும்போது நியூசிலாந்து அணியின் ஸ்கோர், 39.3 ஓவரில் 220 ரன்கள். அதன்பின்னர் ஒருசில விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. 

Also Read - அவங்க 2 பேரையும் இந்திய அணியில் சேர்ந்து ஆடவைக்கக்கூடாது.. கபில் தேவ் அதிரடி

ஆனால் அதிகமான வாய்ப்பு நியூசிலாந்துக்கே இருந்தது. அந்த சூழலில் பந்துகளை வீணடித்து அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த லேதமும் காலின் டி கிராண்ட் ஹோமும் அடித்து ஆடினர். டி கிராண்ட் ஹோம் களத்திற்கு வந்தது முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மளமளவென ஸ்கோர் செய்து, வெற்றி இலக்கை விரைவில் நெருங்க உதவினார். 

45 ஓவரில் நியூசிலாந்து அணி 273 ரன்கள் அடித்திருந்தது. ஷர்துல் தாகூர் வீசிய 46வது ஓவரில் மொத்தத்தையும் முடித்தார் கிராண்ட் ஹோம். அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி 21 பந்தில் அரைசதம் கடந்தார் கிராண்ட் ஹோம். இதையடுத்து 48வது ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது. 

டி20 தொடரில் தங்களை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணியை, ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்து பழிதீர்த்தது நியூசிலாந்து. 
 

click me!