அவங்க 2 பேரையும் இந்திய அணியில் சேர்ந்து ஆடவைக்கக்கூடாது.. கபில் தேவ் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 11, 2020, 1:50 PM IST
Highlights

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் சேர்ந்து ஆடிவந்த குல்தீப்பும் சாஹலும் இப்போது ஒருசேர அணியில் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில், அவர்கள் இருவரையும் ஒன்றாக ஆடவைக்கக்கூடாது என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 
 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் குல்தீப் யாதவும் சாஹலும் சேர்ந்து 2017 முதல் 2019 உலக கோப்பைக்கு முன்புவரை அசத்தினர். ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல் ஜோடி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிடில் ஓவர்களில் அபாரமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்ததுடன் இந்திய அணிக்கு பல வெற்றிகளையும் பெற்று கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் இணைந்து உலக கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. அவர்கள் இருவரும் உலக கோப்பையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் சொதப்பியதுதான் மிச்சம். அவர்கள் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. 

குல்தீப்பும் சாஹலும் இணைந்து 34 ஒருநாள் போட்டிகளில் ஆடி 65 விக்கெட்டுகளையும் 10 டி20 போட்டிகளில் இணைந்து ஆடி 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு பின்னர், அவர்கள் இருவரும் இணைந்து ஆடும் லெவனில் இடம்பெறவேயில்லை. 

இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக தயாராகிவரும் இந்திய அணி, பேட்டிங் டெப்த்தை கருத்தில்கொண்டு பேட்டிங் ஆடத்தெரிந்த ஸ்பின்னர்களுக்கே அணியில் முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒருவேளை இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தாலும், இருவரில் ஒருவருக்குத்தான் ஆடும் லெவனில் வாய்ப்பு தரப்படுகிறது. ஒருநாள் போட்டிகளிலும் இதே நிலைதான். 

குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் இணைந்து ஆடவைக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். ஹர்பஜன் மாதிரியான சிலர் இதுபோன்ற கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் இருவரையும் சேர்த்து அணியில் எடுக்க தேவையில்லை என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

Also Read - களத்தில் சண்டை போட்ட இந்திய - வங்கதேச வீரர்கள்.. 5 வீரர்களை கையும் களவுமா தூக்கி அதிரடி நடவடிக்கை எடுத்த ஐசிசி

இதுகுறித்து பேசியுள்ள கபில் தேவ், ஜடேஜாவின் பேட்டிங்கும் ஃபீல்டிங்கும் அபாரமாகவுள்ளது. அவர் அனைத்து வகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர். அதனால் தான் மற்ற ஸ்பின்னர்களை விட அவருக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது. இரண்டு ஸ்பின்னர்களுடன் ஆடினால் அது அணியின் பேட்டிங் வலிமையை பாதிக்கும். இந்திய அணியில் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் தேவையான நேரத்தில் ஜடேஜா பேட்டிங்கில் ஸ்கோர் செய்கிறார். அவர் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். எனவே குல்தீப் - சாஹல் ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் ஆட வேண்டிய அவசியமில்லை என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். 
 

click me!