கப்டில், ஃபின் ஆலனின் காட்டடியால் நியூசி., அபார வெற்றி! வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்ற நியூசி.,

By karthikeyan VFirst Published Apr 1, 2021, 3:44 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி அபார வெற்றி பெற்று, வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது நியூசிலாந்து அணி.
 

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்தது. 

ஆக்லாந்தில் மழை என்பதால் போட்டி தொடங்க தாமதமானது. அதனால் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 10 ஓவரில் 141 ரன்களை குவித்தது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் ஃபின் ஆலன் ஆகிய இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அணியின் ஸ்கோரை தாறுமாறாக உயர்த்தினர். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் ஆடிய அவர்கள் இருவரும் இணைந்து 5.4 ஓவரில் 85 ரன்களை குவித்தனர். 

கப்டில் 19 பந்தில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, காட்டடி அடித்த ஃபின் ஆலன் 29 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்தார். அவர்களது அதிரடியால் 10 ஓவரில் 141 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 9.3 ஓவரில் வங்கதேசத்தை வெறும் 76 ரன்களுக்கு சுருட்டியது.

வங்கதேச வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து, 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

click me!