நியூசிலாந்தின் திட்டத்தை தவிடுபொடியாக்கிய நம்ம பவுலர்கள்.. இந்திய அணிக்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Jan 26, 2020, 2:20 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியை சொற்ப ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியும் அதே ஆக்லாந்து மைதானத்தில் நடக்கிறது. 

இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டி20 போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் தான் களமிறங்கின. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ஏற்கனவே ஆடப்பட்ட அதே ஆடுகளம் என்பதால், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் அதை பயன்படுத்தி பெரிய ஸ்கோர் அடிக்கும் முனைப்பில், டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதுமட்டுமல்லாமல் பனிப்பொழிவு பெரிதாக இருக்காது என்பதால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது கடினமாக இருக்காது. அதனால் முதலில் பேட்டிங் ஆடி பெரிய ஸ்கோரை அடிக்கும் முனைப்பில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது. 

ஆனால் நியூசிலாந்து அணியின் திட்டத்தை இந்திய பவுலர்கள் தகர்த்தெறிந்தனர். கடந்த போட்டியில் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடிய கப்டில் மற்றும் முன்ரோவை இந்த முறை அதை செய்ய இந்திய பவுலர்கள் அனுமதிக்கவில்லை. ஷர்துல் தாகூர் வீசிய முதல் ஓவரில் கப்டில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். கப்டிலுக்கு ஷாட்டுகள் நன்றாக கனெக்ட் ஆகின. அதனால் அவர் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க, முன்ரோ அடித்து ஆடமுடியாமல் திணறினார். 

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கப்டிலை 33 ரன்களில் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். இதையடுத்து முன்ரோவுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். ஏற்கனவே முன்ரோ திணறிக்கொண்டிருக்க, வில்லியம்சனும் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாமல் திணறினார். ஷமி, சாஹல், ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோர் மிடில் ஓவர்களை அருமையாக வீசினர். 

தட்டுத்தடுமாறி ஆடிக்கொண்டிருந்த முன்ரோ, 25 பந்தில் 26 ரன்கள் அடித்து ஷிவம் துபேவின் பந்தில் அவுட்டானார். கடந்த முறை டக் அவுட்டான காலின் டி கிராண்ட் ஹோம், இந்த முறை வெறும் 3 ரன்னில் ஜடேஜாவின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். பெரிய ஷாட் அடிக்க முடியாமல் திணறிய வில்லியம்சன், 20 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 14 ரன்கள் மட்டுமே அடித்து அவரும் ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து டெய்லருடன் டிம் சேஃபெர்ட் ஜோடி சேர்ந்தார். சேஃபெர்ட் ஒரு சில ஷாட்டுகளை ஆடினார். ஆனால் டெய்லர், இந்திய அணியின் பவுலிங்கில் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாமல் தடுமாறினார். அவரும் பவுண்டரியோ சிக்ஸரோ அடித்துவிட வேண்டும் என போராடினார். ஆனால் 24 பந்துகளை எதிர்கொண்ட அவரால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. 24 பந்தில் வெறும் 18 ரன்கள் மட்டுமே அடித்து பும்ரா வீசிய இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டானதற்கு அடுத்த பந்தில் சேஃபெர்ட் சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 

இந்திய அணியின் அபாரமான பவுலிங்கின் காரணமாக ரன் அடிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து அணி, 20 ஓவரில் வெறும் 132 ரன்கள் மட்டுமே அடித்தது. 204 ரன்கள் என்ற இலக்கையே அசால்ட்டாக அடித்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இதெல்லாம் ஒரு டார்கெட்டே இல்லை. 
 

click me!