2வது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டனின் துணிச்சலான முடிவு.. நம்ம டீமும் செம கெத்துதான்

By karthikeyan VFirst Published Jan 26, 2020, 12:11 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 204 ரன்கள் என்ற இலக்கை ராகுல், கோலி, ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான பேட்டிங்கால் 19வது ஓவரிலேயே எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில், முதல் போட்டி நடந்த அதே ஆக்லாந்தில் இரண்டாவது டி20 போட்டியும் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே ஆடப்பட்ட அதே ஆடுகளம் என்பதால், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் அதை பயன்படுத்தி பெரிய ஸ்கோர் அடிக்கும் முனைப்பில், டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பனிப்பொழிவு பெரிதாக இருக்காது என்பதால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது கடினமாக இருக்காது. அதனால் முதலில் பேட்டிங் ஆடி பெரிய ஸ்கோரை அடிக்கும் முனைப்பில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் ஆடுகிறது. 

முதல் போட்டியில் இந்திய அணி, 204 ரன்கள் என்ற பெரிய இலக்கை எளிதாக அடித்த போதிலும், இந்திய அணி இலக்கை விரட்டுவதில் வல்லமை பெற்ற அணி என்று தெரிந்தபோதிலும் கூட, நியூசிலாந்து அணி துணிச்சலாக முதலில் பேட்டிங் ஆட தீர்மானித்துள்ளது. 

இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரு அணிகளுமே முதல் போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் தான் இந்த போட்டியில் ஆடுகின்றன. இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசி 44 ரன்களை வாரி வழங்கிய ஷர்துல் தாகூரே இந்த போட்டியிலும் ஆடுகிறார். பெரியளவில் வேகமில்லாத தாகூரின் பவுலிங்கை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பொளந்துகட்டிய போதும் கூட, அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் இந்த போட்டியில் ஆடவைத்துள்ளது இந்திய அணி நிர்வாகம். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், சாஹல், ஷமி, பும்ரா.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, ஹாமிஷ் பென்னெட், ப்ளைர் டிக்னெர். 
 

click me!