எந்த நியூசிலாந்து வீரருமே கிடைச்ச ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸா மாத்தல.. உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Jul 14, 2019, 7:40 PM IST
Highlights

உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.
 

உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக தொடங்கினார். இதுவரை இந்த உலக கோப்பையில் நல்ல ஸ்டார்ட் கிடைக்காமல் திணறிவந்த கப்டிலுக்கு இந்த போட்டியில் நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 18 பந்துகளில் 19 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் நிகோல்ஸுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தது. வில்லியம்சனும் சுமார் 9 ஓவர்கள் பேட்டிங் ஆடி  30 ரன்கள் அடித்த நிலையில், களத்தில் நிலைத்த பிறகு ஆட்டமிழந்து ஏமாற்றினார். அரைசதம் அடித்த நிகோல்ஸ் 55 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமக்க வேண்டிய அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லேதம் ஒருமுனையில் நிற்க, மறுமுனையில் நம்பிக்கையளிக்கும்படி அடித்து ஆடிய ஜேம்ஸ் நீஷமும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டி கிராண்ட் ஹோம் களமிறங்கியது முதலே சரியாக ஷாட் ஆடமுடியாமல் திணறினார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் சில பவுன்ஸர்களில் உடலில் அடியும் வாங்கினார். தட்டுத்தடுமாறி 28 பந்துகளில் 16 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, லேதமும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 10 ஓவர்களில் இங்கிலாந்து பவுலர்கள் நல்ல வேரியேஷனில் பந்துவீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட் ஆடவிடாமல் ரன்களை கட்டுப்படுத்தினர். இதையடுத்து 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்த ஸ்கோர் கொஞ்சம் குறைவுதான். எனினும் நியூசிலாந்து அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளதால், இந்தியாவுக்கு எதிராக செய்தது போன்று தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்தினால் தான் அந்த அணிக்கு வெற்றி சாத்தியம். இல்லையெனில் நல்ல பேட்டிங் டெப்த்தை கொண்ட இங்கிலாந்து அணி 242 ரன்கள் என்ற இலக்கை சிரமமில்லாமல் அடித்துவிடும்.

click me!