#ICCWTC ஃபைனல்: ரோஹித் - கில் நல்ல தொடக்கம்..! ஒருவழியா ஓபனிங் ஜோடியை தகர்த்த நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Jun 19, 2021, 4:59 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்த நிலையில், 21வது ஓவரில் ஒருவழியாக ரோஹித் சர்மாவை 34 ரன்களுக்கு வீழ்த்தினார் கைல் ஜாமிசன். அவரை தொடர்ந்து ஷுப்மன் கில்லும் ஆட்டமிழந்தார்.
 

இந்தியா - நியூசிலாந்து மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 2ம் நாளான இன்று போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். ஸ்விங் கண்டிஷன் என்பதால், டிம் சௌதி, டிரெண்ட் போல்ட்டை வைத்து தொடக்கத்திலேயே ஒருசில விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கையில் இறங்கியது நியூசிலாந்து அணி.

ஆனால் ரோஹித் சர்மாவும் இளம் வீரரான ஷுப்மன் கில்லும் இணைந்து டிம் சௌதி மற்றும் டிரெண்ட் போல்ட்டின் பவுலிங்கை மிகத்தெளிவாகவும் நிதானமாகவும் எதிர்கொண்டனர். மிகக்கவனமாக ஆடிய அவர்கள் இருவருமே, அடிக்க வேண்டிய பந்துகளை மட்டுமே அடித்து ஆடியதுடன், ரன் வேகம் குறையாமல் சீரான வேகத்தில் ஸ்கோர் செய்துகொண்டே இருந்தனர். அதனால் நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. 

முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் கில்லும் இணைந்து 62 ரன்களை சேர்த்தனர். ஜாமிசனின் பந்தில் ரோஹித் சர்மா 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஷுப்மன் கில்லும் 28 ரன்களில் நீல் வாக்னரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

நல்ல தொடக்கத்திற்கு பிறகு 63 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. புஜாராவும் கோலியும் இணைந்து ஆடிவருகின்றனர். 

click me!