நமீபியாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய நியூசி.,! இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கடினம்

By karthikeyan VFirst Published Nov 5, 2021, 6:58 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் வெற்றி கட்டாயத்துடன் நமீபியாவை எதிர்கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி, 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, க்ரூப் 2 புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி, வெற்றி கட்டாயத்துடன் அனுபவமற்ற நமீபியா அணியை எதிர்கொண்டு ஆடியது நியூசிலாந்து அணி. 

ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

நமீபியா அணி:

ஸ்டீஃபன் பார்ட், க்ரைக் வில்லியம்ஸ், கெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), டேவிட் வீஸ், ஜேஜே ஸ்மிட், ஜேன் க்ரீன் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் வான் லிங்கென், கார்ல் பிர்கென்ஸ்டாக், ஜேன் நிகால் லாஃப்டி - ஈட்டான், ருபென் ட்ரம்பெல்மேன், பெர்னார்டு ஸ்கால்ட்ஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணிக்கு நமீபியா பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். அதிரடி பேட்ஸ்மேன்கள் மார்டின் கப்டில், டேரைல் மிட்செல் ஆகிய வீரர்களுக்கு அவ்வளவு எளிதாக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் கஷ்டப்பட்டே ரன் அடிக்க வேண்டியதாக இருந்தது. கடந்த போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக அதிரடியாக ஆடி பட்டைய கிளப்பிய கப்டில் இந்த போட்டியில் 18 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டேரைல் மிட்செலும் 15 பந்தில் 19 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், வழக்கம்போலவே தனது அந்த பணியை டெவான் கான்வேவுடன் இணைந்து செவ்வனே செய்தார் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர்கள் இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 38 ரன்களை சேர்த்தனர். டெவான் கான்வே 17 ரன்னுக்கு ரன் அவுட்டாகி வெளியேற,  கேப்டன் வில்லியம்சனும் 25 பந்தில் 28 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

16 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 16 ஓவர்கள் வரை ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நமீபியா அணி, கடைசி 4 ஓவரில் கோட்டைவிட்டது. கடைசி 4 ஓவர்களில் க்ளென் ஃபிலிப்ஸும் ஜிம்மி நீஷமும் இணைந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

க்ளென் ஃபிலிப்ஸ் 21 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 39 ரன்களையும், நீஷம் 23 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களையும் விளாச, கடைசி 4 ஓவரில் நியூசிலாந்து அணி 67 ரன்களை குவித்தன் விளைவாக, 20 ஓவரில் 163 ரன்களை குவித்தது.

இதையடுத்து ஷார்ஜா கண்டிஷனில் 164 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நமீபியா அணி வீரர்கள் பவர்ப்ளேயில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடினர். ஆனால் பவர்ப்ளே முடிந்து 8வது ஓவரில் வான் லிங்கன் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீஃபன் பார்டும் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மிடில் ஓவர்களில் மிட்செல் சாண்ட்னெரும், இஷ் சோதியும் இணைந்து அருமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினர். ஸ்கோர் வேகமெடுக்காததால் நெருக்கடி அதிகரித்ததையடுத்து, க்ரீன் (23), வீஸ் (16), ஜான் நிகோல் (0), க்ரைக் வில்லியம்ஸ் (0) ஆகிய அனைவருமே அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 20 ஓவரில் 111 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியதுடன், நல்ல ரன்ரேட்டையும் பெற்றுள்ளது. இந்த அபார வெற்றியின் மூலம், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை மேலும் கடினமாக்கியுள்ளது நியூசிலாந்து.
 

click me!