#NZvsBAN கேப்டன் டாம் லேதமின் அதிரடி சதத்தால் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்ற நியூசிலாந்து

By karthikeyan VFirst Published Mar 24, 2021, 2:36 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாம் லேதமின் அதிரடி சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி நேற்று நடந்தது. கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான தமீம் இக்பால் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அதன்பின்னர் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடிய மிதுன் 57 பந்தில் 73 ரன்கள் அடித்தார். தமீம் இக்பால்(78) மற்றும் மிதுனின்(73) அரைசதங்கள் மற்றும் சௌமியா சர்க்கார்(32), முஷ்ஃபிகுர் ரஹீமின்(34) ஓரளவிற்கான பங்களிப்பால் 50 ஓவரில் 271 ரன்கள் அடித்தது வங்கதேச அணி.

272 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் 20 ரன்னிலும் ஹென்ரி நிகோல்ஸ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, 3ம் வரிசையில் இறங்கிய கான்வேயும் கேப்டன் டாம் லேதமும் இணைந்து சிறப்பாக ஆடி அணியை கரைசேர்த்தனர். 

அபாரமாக ஆடிய கான்வே 72 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாகவும் பொறுப்பாகவும் ஆடிய கேப்டன் டாம் லேதம் சதமடித்தார். 110 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் லேதம். 49வது ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, முதல் போட்டியிலும் வென்றிருந்ததால் 2-0 என தொடரை வென்றது.
 

click me!