அறிமுக போட்டியிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த க்ருணல் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா..!

By karthikeyan VFirst Published Mar 24, 2021, 2:11 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான க்ருணல் பாண்டியா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் அறிமுக போட்டியிலேயே வரலாற்று சாதனை படைத்தனர்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி புனேவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, தவானின் அபாரமான பேட்டிங்(98), விராட் கோலி(56), கேஎல் ராகுல்(62), க்ருணல் பாண்டியா(58) ஆகியோரின் அதிரடி அரைசதங்களால் இந்திய அணி 50 ஓவரில் 317 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் அறிமுகமான க்ருணல் பாண்டியா, அதிரடியாக ஆடி 26 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் க்ருணல் பாண்டியா. 

318 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ மற்றும் பட்லர் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 135 ரன்களை குவித்த நிலையில், 15வது ஓவரில் ராயை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் அறிமுக பவுலர் பிரசித் கிருஷ்ணா. அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோவை 94 ரன்களுக்கு வீழ்த்திய ஷர்துல் தாகூர், மோர்கன் மற்றும் பட்லரையும் வீழ்த்தினார்.

சாம் பில்லிங்ஸ் மற்றும் டாம் கரனையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்த, 42.1 ஓவரில் 251 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது. இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா, 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் பிரசித் கிருஷ்ணா. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் இந்திய பவுலரின் மிகச்சிறந்த பெர்ஃபாமன்ஸ் இதுதான். பேட்டிங்கில் க்ருணல் பாண்டியா அறிமுக போட்டியில் சாதனை படைத்ததை போலவே பவுலிங்கில் பிரசித் கிருஷ்ணா படைத்தார்.
 

click me!