#NZvsAUS கப்டிலின் காட்டடியால் கடைசி டி20யில் ஆஸி.,யை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து..!

By karthikeyan VFirst Published Mar 7, 2021, 2:46 PM IST
Highlights

மார்டின் கப்டிலின் அதிரடி அரைசதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-2 என டி20 தொடரை வென்றது நியூசிலாந்து அணி.
 

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியும், அடுத்த 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்ற நிலையில், கடைசி டி20 போட்டி இன்று வெலிங்டனில் நடந்தது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச், கடந்த 2 போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடிய நிலையில், இந்த போட்டியில் சற்று மெதுவாகவே ஆடினார். 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 36 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் ஃபிலிப் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கிய மேத்யூ வேட், இந்த போட்டியில் 3ம் வரிசையில் இறங்கினார். அவர் 29 பந்தில் 44 ரன்கள் அடித்தார்.

அதன்பின்னர் வேறு யாருமே சரியாக ஆடவில்லை. மந்தமாக ஆடிய ஸ்டோய்னிஸ் 26 பந்தில் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். யாருமே அதிரடியான பேட்டிங் ஆடாததால் 20 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 142 ரன்கள் மட்டுமே அடித்தது. நியூசிலாந்து அணி சார்பில் இஷ் சோதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 143 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் கான்வே ஆகிய இருவரும் சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு கப்டிலும் கான்வேயும் இணைந்து 11.5 ஓவரிலேயே 106 ரன்களை குவித்து கொடுத்தனர். கான்வே 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மார்டின் கப்டில்  46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் அடித்து, 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களுக்கு அவர் வேலையை எளிதாக்கிவிட்டு ஆட்டமிழந்தார்.  அதிரடியாக ஆடிய க்ளென் ஃபிலிப்ஸ், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி கப்டில் அவுட்டானதற்கு அடுத்த ஓவரிலேயே அணியை வெற்றி பெற செய்தார்.

143 ரன்கள் என்ற இலக்கை 16வது ஓவரிலேயே அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 3-2 என தொடரை வென்றது. மார்டின் கப்டில் ஆட்டநாயகனாகவும், இஷ் சோதி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

click me!