T20 World Cup நியூசிலாந்திடம் வீழ்ந்தது ஆஃப்கானிஸ்தான்.. வெளியேறியது இந்தியா

By karthikeyan VFirst Published Nov 7, 2021, 6:51 PM IST
Highlights

வாழ்வா சாவா போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் ஜெயித்தால் அரையிறுதிக்கான வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்த நிலையில், நியூசிலாந்து ஜெயித்ததால் இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியது.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று நாளையுடன் முடிகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறிவிட்ட நிலையில், 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்கும் இருந்தது.

நியூசிலாந்து  - ஆஃப்கானிஸ்தான் இடையே இன்று அபுதாபியில் நடந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் ஜெயித்தால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த போட்டியில் அதற்கு இடம் கொடுக்கவில்லை நியூசிலாந்து அணி.

ஆஃப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 8 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஹஸ்ரதுல்லா சேஸாய்(2), முகமது ஷேஷாத்(4) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற அவர்களை தொடர்ந்து, ஆஃப்கான் அணியின் முக்கியமான பேட்ஸ்மேனான ரஹ்மானுல்லா குர்பாஸும் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்பாதின் நைப் 15 ரன்னிலும், முகமது நபி 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆஃப்கானிஸ்தான் அணிக்காக தனி ஒருவனாக போராடி அரைசதம் அடித்த நஜிபுல்லா ஜட்ரான் 48 பந்தில் 73 ரன்களை குவித்தார். அவரும் 19வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் எஞ்சிய 10 பந்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 5 ரன்கள் மட்டுமே அடிக்க, 20 ஓவரில் ஆஃப்கான் அணி 124 ரன்கள் மட்டுமே அடித்தது.

125 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி வீரர்கள் ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான் ஆகிய அபாயகரமான பவுலர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். டேரைல் மிட்செல் 17 ரன்னிலும், மார்டின் கப்டில் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சனும், டெவான் கான்வேவும் இணைந்து மிக அருமையாக ஆடி, கடைசிவரை களத்தில் நின்று தங்கள் வேலையை செவ்வனே செய்து முடித்தனர்.

இலக்கு எளிதானது என்பதால் எந்த நெருக்கடியும் இல்லாமல் பேட்டிங் ஆடிய வில்லியம்சனும், கான்வேவும் ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மானின் பவுலிங்கை பாதுகாப்பாக ஆடிவிட்டு மற்ற பவுலர்களை அடித்து ஆடி 19வது ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.

இந்த வெற்றியையடுத்து, 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி. நியூசிலாந்தின் வெற்றியையடுத்து, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் தொடரைவிட்டு வெளியேறுகிறது. 
 

click me!