
டி20 உலக கோப்பையில் க்ரூப் 1-ல் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறப்போவது எந்த அணி என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி அபுதாபியில் நடந்துவருகிறது.
நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் ஜெயித்தால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது என்பதால் இந்திய அணியின் பார்வையில் இது மிக முக்கியமான போட்டி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா சேஸாய் 2 ரன்னிலும், முகமது ஷேஷாத் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஆஃப்கான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ரஹ்மானுல்லா குர்பாஸும் 6 ரன்னில் டிம் சௌதியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் குல்பாதின் நைப் (15), கேப்டன் முகமது நபி (14) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். அனைவரும் சொதப்பினாலும், நஜிபுல்லா ஜட்ரான் தனி நபராக நின்று அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஜட்ரான் 48 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து 19வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 18.2 ஓவரில் 119 ரன்களாக இருந்தபோது ஜட்ரான் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கரீம் ஜனத்தும் ஆட்டமிழக்க, 20 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 124 ரன்கள் மட்டுமே அடித்தது.
ஆஃப்கானிஸ்தான் அணி ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை பெற்றிருந்தாலும், 125 ரன்கள் என்பது மிக எளிதான இலக்கு. நியூசிலாந்து மாதிரியான சிறந்த அணி கண்டிப்பாக அந்த இலக்கை அடித்துவிடும். எனவே இந்திய அணியின் அரையிறுதி கனவு கிட்டத்தட்ட கலைந்தது.