இந்திய கிரிக்கெட் ரசிகர்களே.. ஆஃப்கானிஸ்தானின் இந்த ஒரு புள்ளிவிவரத்தை பாருங்க..! செம ஜாலி ஆகிடுவீங்க

By karthikeyan VFirst Published Nov 7, 2021, 4:25 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது ஆஃப்கானிஸ்தான் கையில் இருக்கும் நிலையில், டி20 கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஒரு புள்ளிவிவரம் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக அமைந்துள்ளது.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற, நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.  இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 2 அணிகளும் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. நெட் ரன்ரேட்டில் நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 2 அணிகளையும் விட இந்திய அணி முன்னிலையில் உள்ளது. 3 அணிகளுக்குமே ஒரேயொரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இதில் 2 அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அபுதாபியில் நடக்கிறது. இந்திய அணி நமீபியாவை நாளைய போட்டியில் கண்டிப்பாக வீழ்த்தி வெற்றி பெற்றுவிடும் என்பதால், இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை ஆஃப்கானிஸ்தான் வீழ்த்தினால், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். எனவே  இந்தியாவின் பார்வையில் இது மிக முக்கியமான போட்டி.

எனவே இந்த நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான இந்த போட்டியை இந்திய அணி  பெரும் எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கிவரும் நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணியின் ஒரு புள்ளிவிவரம் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

2016 டி20 உலக கோப்பைக்கு பிறகு, பகலில் ஆடிய 19 சர்வதேச டி20 போட்டிகளில் 18ல் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, ஒன்றே ஒன்றில் தான் தோற்றுள்ளது. அதுவும் ஆட்டம் டை ஆகி சூப்பர் ஓவரில் தோற்றிருக்கிறது. அந்தளவிற்கு பகலில் ஆடிய ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி அசத்தியிருக்கிறது ஆஃப்கானிஸ்தான். பகலில் ஆடிய இந்த 19 போட்டிகளில் 13ல் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, அனைத்து போட்டிகளிலுமே ஜெயித்திருக்கிறது.

அந்தவகையில், ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அபுதாபியில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்த்து ஆடிவருகிறது. முதலில் பேட்டிங்கும் ஆடிவருகிறது. ஆஃப்கானிஸ்தான் அணி பலத்திற்கு சாதகமாக இந்த போட்டியில் ஆடிவருவதால் வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது என நம்புவோம்.

இந்த தொடரிலுமே இந்தியாவுக்கு எதிராக மட்டுமே  டாஸ் வென்று சேஸிங் செய்தது ஆஃப்கானிஸ்தான் அணி. மற்ற அனைத்து போட்டிகளிலுமே டாஸ் வென்று முதலில் பேட்டிங்தான் ஆடியது. உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, முதலில் பேட்டிங் ஆடிவிட்டு, இலக்கை கட்டுப்படுத்துவதுதான் சிறந்த வியூகமாக அமையும்.
 

click me!