2வது டெஸ்ட்.. இங்கிலாந்துக்கு எதிராக முதல் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூசிலாந்து.. டாம் லேதம் அபார சதம்

By karthikeyan VFirst Published Nov 29, 2019, 11:28 AM IST
Highlights

நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லேதம் அபாரமாக ஆடி சதமடித்தார்.

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜீட் ராவல் வெறும் 5 ரன்களிலும், அவரை தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

39 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தொடக்க வீரர் டாம் லேதமுடன் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து லேதமுடன் இணைந்து சிறப்பாக ஆடினார் டெய்லர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 116 ரன்களை சேர்த்தனர். லேதம் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து டெய்லரும் அரைசதம் அடித்தார். 

அரைசதம் அடித்த டெய்லர், தனக்கு கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 53 ரன்களில் நடையை கட்டினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டாம் லேதம் சதமடித்து அசத்தினார். அவருடன் ஹென்ரி நிகோல்ஸ் ஆடிக்கொண்டிருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால், முதல் நாள் ஆட்டமான இன்று 54.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. சதமடித்த லேதம் 101 ரன்களுடனும் ஹென்ரி நிகோல்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

click me!