நேபாள் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 7ஆவது போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நேபாள் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 7ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நேபாள் அணியான சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசியாக 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், அதிகபட்சமாக கேப்டன் ரோகித் பாடெல் 35 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் டிம் பிரிங்கில் மற்றும் லோகன் வான் பீக் ஆகியோர் தலா3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பால் வான் மீக்கரென் மற்றும் பாஸ் டீ லீட் ஆகியோர் தல 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் மைக்கெல் லெவிட் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
விக்ரம்ஜித் சிங் 22 ரன்களும், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 14 ரன்கள் எடுத்து வெளியேற, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் மேக்ஸ் ஓ டவுட் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 109 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.