ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்க, முன்னாள் கேப்டனின் உருப்படியான ஆலோசனை

By karthikeyan VFirst Published Jun 22, 2020, 9:23 PM IST
Highlights

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்க, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பயனுள்ள ஆலோசனையை வழங்கியுள்ளார். 
 

ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டன். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக திகழும் ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 4 சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா, சமகால கிரிக்கெட் வீரர்கள் பலருக்கே மிகவும் பிடித்தமான பேட்ஸ்மேன். அவர் களத்தில் நிலைத்துவிட்டால், கண்டிப்பாக மிகப்பெரிய ஸ்கோரை அடித்துவிடுவார். அலட்டிக்கொள்ளாமல் பெரிய ஷாட்டுகளை அசால்ட்டாக அடிக்கும் ரோஹித் சர்மாவிற்கு, முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் ரசிகர்கள்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த நிலையில், கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக இறங்கி, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய தொடர்களில் சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியிலும் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். 

தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக ரோஹித் சர்மா ஆடிய இரண்டு தொடர்களுமே இந்தியாவில் நடந்தவை. இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலித்த ரோஹித் சர்மா, கடினமான கண்டிஷன்களான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க ஆடுகளங்களிலும் சிறப்பாக ஆடியாக வேண்டும். அப்போதுதான் அவர் டெஸ்ட் வீரராக அங்கீகாரத்தை பெறுவார். 

இந்நிலையில், ரோஹித் சர்மா வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஜொலிக்க, அவருக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஆலோசனை கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள நாசர் ஹுசைன், ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆடவில்லையென்றால், நான் வேறு போட்டியை பார்க்க சென்றுவிடுவேன். சமகால கிரிக்கெட் வீரர்களிடம் சென்று அவர்களுக்கு பிடித்த பேட்ஸ்மேன் யார் என்று கேளுங்கள்... பெரும்பாலானோர் ரோஹித் சர்மா என்றுதான் சொல்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கும்போது, போதிய கால அவகாசம் எடுத்துக்கொண்டு ஆட வேண்டும். பேட்டிங் டெக்னிக்கும் ரொம்ப முக்கியம். ஆஃப் ஸ்டம்ப்பை கவனமாக கவர் செய்ய வேண்டும். 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலி, ஆண்டர்சனின் பவுலிங்கை, ஆஃப் ஸ்டம்ப்பை கவர் செய்து அருமையாக ஆடினார்.

கோலி செய்த அதைத்தான் ரோஹித் சர்மாவும் செய்ய வேண்டும். இந்திய ஆடுகளங்களுக்கு வெளியே சவாலான ஆடுகளங்களில் தொடக்க வீரராக ஆடும்போது, களத்தில் நிலைக்க குறைந்தது அரைமணி நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் அரை மணி நேரத்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்காமல் விட்டு, ஸ்லிப் ஃபீல்டர்களுக்கு வேலையில்லாமல் செய்ய வேண்டும். அதை மட்டும் செய்தால் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிப்பார் என்று நாசர் ஹுசைன் ஆலோசனை தெரிவித்துள்ளார். 
 

click me!