ராகுல் டிராவிட்டுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை..! கம்பீர் வேதனை

By karthikeyan VFirst Published Jun 22, 2020, 8:27 PM IST
Highlights

ராகுல் டிராவிட்டுக்கு, கிரிக்கெட் வீரராகவும், ஒரு கேப்டனாகவும் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

ராகுல் டிராவிட்டுக்கு, கிரிக்கெட் வீரராகவும், ஒரு கேப்டனாகவும் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கவாஸ்கர், சச்சின், கோலி ஆகிய மூவரும் அவரவர் தலைமுறையின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகின்றனர். கபில் தேவ், குண்டப்பா விஸ்வநாத், அசாருதீன், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக், யுவராஜ் சிங், லட்சுமணன், தோனி, ரோஹித் சர்மா ஆகியோரும் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர்.

ரன்கள், சதங்கள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். ஆனால் ரன்களை கடந்து, பேட்டிங் டெக்னிக்கிலும், நெருக்கடியை சமாளித்து ஆடும் மன வலிமையின் அடிப்படையிலும் இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட். ஆனால் அவரது திறமைக்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

பேட்டிங் டெக்னிக் மற்றும் நெருக்கடியான சூழலில் அழுத்தத்தை சமாளித்து ஆடுவது ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவில் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட ராகுல் டிராவிட் ஒரு படி மேல் என்று பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

1996லிருந்து 2012ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடிய ராகுல் டிராவிட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மொத்தமாக 509 சர்வதேச போட்டிகளில் ஆடி, 24208 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6வது வீரராக திகழ்கிறார்.

சுயநலமாக ஒரு இன்னிங்ஸ் கூட ஆடாத வீரர் ராகுல் டிராவிட். அணியின் நலனையும் வெற்றியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆடியவர். ராகுல் டிராவிட் டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர் அல்ல ராகுல் டிராவிட். சச்சின், தோனி மாதிரியான வீரர்கள் ஓவராக தூக்கி கொண்டாடப்பட்டதால், ராகுல் டிராவிட்டின் பெரும் பொதுவெளியில் பெரிதாக பேசப்படவில்லை. சச்சின், கோலியை போல ராகுல் டிராவிட் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படவில்லை. 

ராகுல் டிராவிட்டுக்கு ஒரு பேட்ஸ்மேனாக எப்படி கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லையோ, அதேபோலத்தான் கேப்டன்சியிலும் குறைத்து மதிப்பிடப்பட்டார். இந்திய அணியை 25 டெஸ்ட் மற்றும் 79 ஒருநாள் போட்டிகளில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். ராகுல் டிராவிட் சிறந்த கேப்டன் தான். அவரது கேப்டன்சியில் டெஸ்ட் கிரிக்கெட்டில், வெளிநாடுகளில் இந்திய அணி தொடர்களை வென்றுள்ளது. ஆனாலும் 2007 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அவரது கேப்டன்சியில் லீக் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது அவரது கேப்டன்சி கெரியரில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. 

ராகுல் டிராவிட் நீண்டகாலம் இந்திய அணியின் கேப்டனாக செயல்படவில்லை என்றாலும், அவரது குறைந்த கேப்டன்சி காலத்தில் இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனாலும் ஒரு வீரராக எப்படி சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையோ, அதேபோலத்தான் ஒரு கேப்டனாகவும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கங்குலியை பற்றியும் தோனியை பற்றியும் பேசுபவர்கள், ராகுல் டிராவிட்டை பற்றி பேசுவதில்லை. 

இந்நிலையில், ராகுல் டிராவிட்டின் திறமைக்கும் தகுதிக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காதது குறித்து கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார். 

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில், ராகுல் டிராவிட் பேசிய கவுதம் கம்பீர், நான் கங்குலியின் கேப்டன்சியில் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானேன். ஆனால் எனது முதல் டெஸ்ட் போட்டியை ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் தான் ஆடினேன். ராகுல் டிராவிட்டின் கேப்டன்சிக்கு கொடுக்க வேண்டிய கிரெடிட்டை நாம் கொடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. நாம் கங்குலி, தோனி.. இப்போது கேப்டனாகவுள்ள கோலி பற்றி கூட பேசுகிறோம்.. ஆனால் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனான ராகுல் டிராவிட்டை பற்றி மட்டும் பேசுவதில்லை. அவருடைய ரெக்கார்டுகளும்  பெரியளவில் பேசப்படவில்லை; குறைத்து மதிப்பிடப்பட்டன. கேப்டனாகவும் அவருக்கு கிடைக்க வேண்டிய கிரெடிட்டும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் 14-15 போட்டிகளில் வென்றிருக்கிறோம்.

ராகுல் டிராவிட், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்குவார், மூன்றாம் வரிசையிலும் ஆடுவார், விக்கெட் கீப்பிங்கும் செய்வார், ஃபினிஷராகவும் ஆடுவார். அவர் அணிக்காக அனைத்து விதத்திலும் பங்களிப்பு செய்யக்கூடிய வீரர். இந்திய கிரிக்கெட்டும், கேப்டனும் எந்தவிதமான பங்களிப்பை எதிர்பார்த்தாலும் அதை செய்யக்கூடியவர். இப்போதைய இளம் வீரர்களுக்கெல்லாம் மிகச்சிறந்த ரோல் மாடல் அவர்.

சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ராகுல் டிராவிட் என்று கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். 
 

click me!