கோலி இடத்துல வேற யாராவது இருந்தா அந்த மரண அடிக்கு பிறகு காணாமல் போயிருப்பாங்க..! கம்பீர், லட்சுமணன் புகழாரம்

By karthikeyan VFirst Published Jun 22, 2020, 3:57 PM IST
Highlights

விராட் கோலியின் மனவலிமையை முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகிய இருவரும் விதந்தோதியுள்ளனர். 
 

விராட் கோலியின் மனவலிமையை முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகிய இருவரும் விதந்தோதியுள்ளனர். 

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து அசத்திவருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(100 சதங்கள்), ரிக்கி பாண்டிங்(71 சதங்கள்) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் 2 சதங்கள் அடித்தால், ரிக்கி பாண்டிங்கை முந்தி இரண்டாவது இடத்துக்கு சென்றுவிடுவார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை கூட கோலி முறியடிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதே ஃபார்மில் இன்னும் 7 ஆண்டுகள் ஆடினால், கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை தகர்த்துவிடுவார். 

மூன்றுவிதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவரும் கோலி, இந்தியாவில் மட்டுமல்லாது, இந்தியாவிற்கு வெளியேயும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என உலகம் முழுதும் சிறப்பாக ஆடிவருகிறார்.

இன்றைக்கு சாதனையாளராக திகழும் கோலியின் கிரிக்கெட் கெரியரிலும் தொய்வு ஏற்பட்டது. ஆம்.. 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணம் விராட் கோலியின் கிரிக்கெட் கெரியரில் படுமோசமான தொடராக அமைந்தது. அந்த சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்திடம் இந்தியா இழந்தது.

அந்த தொடரில் மொத்தமாக 5 போட்டிகளிலும் சேர்த்தே விராட் கோலி, வெறும் 134 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது பேட்டிங் சராசரி அந்த தொடரில் வெறும் 13.4 ரன்கள். அந்த சுற்றுப்பயணத்துடன் நிறைய வீரர்களின் டெஸ்ட் கெரியர் முடிந்தது.

அப்படியொரு மோசமான சுற்றுப்பயணத்திற்கு பிறகும், மனதை தளரவிடாமல் அதிலிருந்து மீண்டு செம கம்பேக் கொடுத்து, இன்று வரை சிறந்த பேட்ஸ்மேனாக நீடித்துவருகிறார். அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பின்னர், அதே ஆண்டின்(2014) இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அந்த தொடரில் 4 போட்டிகளில் 4 சதங்களுடன் 692 ரன்களை குவித்து கம்பேக் கொடுத்தார் விராட் கோலி. 

இந்நிலையில், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அடைந்த வளர்ச்சி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் வீரர்கள் கம்பீரும் விவிஎஸ் லட்சுமணனும் கோலியின் மனவலிமையை விதந்தோதினர். 

2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் படுமோசமாக கோலி பேட்டிங்கில் சொதப்பிய பின்னரும், அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அப்போதைய கேப்டன் தோனி ஆதரவளித்ததால்தான் கோலி இன்றைக்கு பெரிய வீரராக திகழ்கிறார் என்றும் அந்த கிரெடிட் தோனியையே சேரும் என தெரிவித்த கம்பீர், கோலியின் மனவலிமையையும் புகழ்ந்தார். 

கோலியின் மனவலிமையை புகழ்ந்து பேசிய கம்பீர், மனதளவில் வீக்கான வீரராக கோலி இருந்திருந்தால், அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் கெரியரை முடிந்திருக்கும். மனவலிமை இல்லாத வீரராக இருந்தால், அவரே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கி, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டும் ஆடுகிறேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவர் மனவலிமை கொண்டவர். அதனால்தான் அந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தார் என்று கம்பீர் தெரிவித்தார்.

அதன்பின்னர் கோலி குறித்து பேசிய விவிஎஸ் லட்சுமணன், 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணம் படுமோசமானதாக அமைந்தது. ஆனால் அதன்பின்னர் மூன்று விதமான போட்டிகளிலும் கோலி கொடுத்த கம்பேக், அபாரமானது. அதன்பின்னர் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ரன்களை குவிப்பதுடன், இந்திய அணிக்கு வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்து வருகிறார் என்று லட்சுமணன் புகழ்ந்தார். 
 

click me!