டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு முதல் முறையாக தகுதிபெற்று வரலாறு படைத்தது நமீபியா அணி..!

By karthikeyan VFirst Published Oct 22, 2021, 7:11 PM IST
Highlights

டி20 உலக கோப்பையின் தகுதி போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நமீபியா அணி, 4வது அணியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடரில் தகுதி போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. ஸ்காட்லாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், கடைசி(4வது) அணியை தீர்மானிக்கும் தகுதிப்போட்டி ஷார்ஜாவில் நடந்தது. 

ஷார்ஜாவில் அயர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. அயர்லாந்து அணி அதன் தொடக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங் மற்றும் கெவின் ஓ பிரயன் ஆகிய இருவரையுமே அதிகமாக சார்ந்திருக்கும் நிலையில், இந்த போட்டியிலும் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் மற்ற அனைவருமே மளமளவென ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதிரடியாக ஆடிய பால் ஸ்டர்லிங் 24 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 24 பந்தில் 25 ரன்களுக்கு கெவின் ஓ பிரயனும் ஆட்டமிழந்தார். கேப்டன் பால்பிர்னி 21 ரன்கள் அடித்தார். 4வது விக்கெட்டாக பால்பிர்னி ஆட்டமிழந்த போது அயர்லாந்தின் ஸ்கோர் 16.1 ஓவரில் 101 ரன்கள். அதன்பின்னர் பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு அயர்லாந்து அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே அடித்தது.

126 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நமீபியா அணியின் தொடக்க வீரர்கள் க்ரைக் வில்லியம்ஸ் 15 ரன்னிலும், ஜேன் க்ரீன் 24 ரன்னிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் எராஸ்மஸும் டேவிட் வீஸாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி  கடைசி வரை நின்று போட்டியை முடித்து கொடுத்தனர். சிறப்பாக ஆடிய எராஸ்மஸ் அரைசதம் அடித்தார். வீஸா 14 பந்தில் 28 ரன்கள் அடித்தார். இருவரும் சிறப்பாக ஆடி 19வது ஓவரில் இலக்கை எட்டினர். 

8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா அணி, முதல் முறையாக டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. 
 

click me!