அந்த பையனுக்கு பயமே இல்ல; அப்படியே சேவாக்கை பார்க்குற மாதிரி இருக்கு! இந்திய இளம் வீரருக்கு முரளிதரன் புகழாரம்

By karthikeyan VFirst Published Jul 17, 2021, 7:24 PM IST
Highlights

பிரித்வி ஷா தனக்கு சேவாக்கை நினைவூட்டுவதாக  முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 


இந்திய கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை போல அடுத்த தலைமுறையின் சிறந்த வீரராக பார்க்கப்படும் பிரித்வி ஷா, பயமே இல்லாமல் தனக்கே உரிய பாணியில் அடித்து ஆடி அனைவரையும் கவர்ந்துவருகிறார்.

இடையில் சில காலம் ஃபார்மில் இல்லாமல் இருந்த பிரித்வி ஷா, கடந்த ஐபிஎல் சீசனின் பாதியில், டெல்லி அணியின் ஆடும் லெவனிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே ஆகிய உள்நாட்டு தொடர்களில் அபாரமாக ஆடி தொடர்ச்சியாக சதங்களை விளாசி பல சாதனைகளையும் படைத்து ஃபார்முக்கு திரும்பினார். அதே ஃபார்மை ஐபிஎல் 14வது சீசனிலும் தொடர்ந்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பிரித்வி ஷா, ஷிகர் தவானுடன் இலங்கைக்கு எதிராக தொடக்க வீரராக இறங்கி ஆடவுள்ளார். நாளை(ஜூலை 18) முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், பிரித்வி ஷா குறித்து பேசியுள்ள முத்தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டைவிட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பிரித்வி ஷா மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஏனெனில் அவர் ஆடும் விதம், எனக்கு சேவாக்கை நினைவுபடுத்துகிறது. நிறைய ரிஸ்க் எடுத்து ஆடி, எதிரணி பவுலர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறார். அவர் நன்றாக ஆடி ஸ்கோர் செய்தால், இந்திய அணி விரைவாக பெரிய ஸ்கோரை அடிக்கும்; இந்திய அணியின் வெற்றியும் பெறும். மிகச்சிறந்த திறமைசாலியான பிரித்வி ஷாவிற்கு பயம் என்பதே கிடையாது. அவுட்டாகிவிடுவோமோ என்ற பயமே அவருக்கு இல்லை.

இந்திய அணி அவரை ஊக்குவித்து வளர்த்தெடுக்க வேண்டும். ஏனெனில் அவரைப்போன்ற மேட்ச் வின்னர்கள் அணிக்கு தேவை. அவர் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் என்று பிரித்வி ஷாவை வெகுவாக புகழ்ந்துள்ளார் முரளிதரன்.

click me!