கடைசி வரை போராடிய யுபி வாரியர்ஸ் – 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது இடத்திற்கு முன்னேறிய மும்பை!

By Rsiva kumarFirst Published Mar 7, 2024, 10:56 PM IST
Highlights

யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இதில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த நிலையில் இன்றைய 14ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, யாஷ்டிகா பாட்டியா மற்றும் ஹேலீ மேத்யூஸ் முதலில் பேட்டிங் செய்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

பிரண்ட் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராஜேஸ்வரி கெயக்வாட் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 33 ரன்களில் சைமா தாக்கூர் பந்தில் நடையை கட்டினார். அடுத்து அமெலியா கெர் 39 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். கடைசியாக சஜீவன் சஜனா 22 ரன்கள் எடுத்துக் கொடுக்க மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

பின்னர் 161 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு யுபி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில், கேப்டன் அலீசா ஹீலி 3 ரன்னிலும், கிரன் நவ்கிரே 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சமரி அத்தபத்து 3 ரன்னில் நடையை கட்டினார். கிரேஸ் ஹாரிஸ் 15, ஷ்வேதா ஷெராவத் 17, பூனம் கேம்னர் 7 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின் வரிசையில் வந்த ஷோஃபி எக்லெஸ்டோன் 0, உமா சேத்ரி 8, சைமா தாக்கூர் 0 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை போராடிய தீப்தி சர்மா 36 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக யுபி வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியானது புள்ளிப்பட்டியலில் 4 வெற்றியோடு 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

யுபி வாரியர்ஸ்:

அலீசா ஹீலி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), கிரன் நவ்கிரே, சமரி அத்தபத்து, கிரேஸ் ஹாரிஸ், ஷ்வேதா ஷெராவத், தீப்தி சர்மா, உமா சேத்ரி, பூனம் கேம்னர், ஷோபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட், சைமா தாக்கூர்.

மும்பை இந்தியன்ஸ்:

ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கேர், பூஜா வஸ்த்ரேகர், அமன்ஜோத் கவுர், சஜீவன் சஜனா, ஹூமைரா கஸீ, சப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

click me!