
ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் ஆடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் முடித்துவிட்டு, செப்டம்பர் - அக்டோபரில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு சென்று ஆடவுள்ளது. எனவே அந்த சுற்றுப்பயணங்களுக்கு தங்கள் அணியின் அனைத்து வீரர்களுடன் முழு பலத்துடன் செல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணி நிர்வாகம் உள்ளது.
அதன்பின்னர் டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகியவையும் இருப்பதால் வீரர்களின் பணிச்சுமை மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியமும் இருப்பதால், ஐபிஎல்லில் ஆட தங்கள் வீரர்களை அனுமதிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தயாராக இல்லை. பென் ஸ்டோக்ஸும் அதே கருத்தைத்தான் தெரிவித்திருந்தார்.
ஒருவேளை அப்படி இங்கிலாந்து வீரர்கள் ஆடவில்லை என்றால், அதனால் கடுமையாக பாதிக்கப்படும் அணிகள் ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் தான். ஏனெனில் ராஜஸ்தான் அணியில் பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய முக்கியமான வீரர்கள் அனைவருமே இங்கிலாந்து வீரர்கள் தான். சிஎஸ்கே அணியிலும் மொயின் அலி மற்றும் சாம் கரன் ஆகிய 2 நல்ல வீரர்கள் உள்ளனர்.
ஆனால் இங்கிலாந்து வீரர்கள் ஆடாததால் கொஞ்சம் கூட பாதிக்கப்படாத 2 அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி. மும்பை அணியின் வெளிநாட்டு வீரர்கள் பொல்லார்டு, டி காக், டிரெண்ட் போல்ட், ஜிம்மி நீஷம், குல்ட்டர்நைல் என இவர்கள் யாருமே இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் அல்ல. அதேபோல, ஆர்சிபி அணியிலும் டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்ஸன், கைல் ஜாமிசன், ஆடம் ஸாம்பா என தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களே தவிர இங்கிலாந்து வீரர் யாரும் இல்லை.