உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட ராயுடு.. முதல் முறையாக மௌனம் கலைத்த எம்.எஸ்.கே.பிரசாத்

By karthikeyan VFirst Published Feb 5, 2020, 12:59 PM IST
Highlights

உலக கோப்பை அணியில் ராயுடு புறக்கணிக்கப்பட்டது குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் வருத்தம் தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. புதிய தேர்வுக்குழு தலைவர் இந்த மாத இறுதியில் தேர்வு செய்யப்படவுள்ளார். 

எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு பதவியில் இருந்த காலத்தில், எதிர்கொண்ட மிகப்பெரிய சர்ச்சையென்றால், அது உலக கோப்பை அணியில் ராயுடுவை புறக்கணித்ததுதான். 

உலக கோப்பைக்கு முன் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் சிக்கல் இருந்தது. டாப் ஆர்டர் வலுவாக இருந்த நிலையில், மிடில் ஆர்டர் ஆட்டம் கண்டிருந்தது. எனவே நான்காம் வரிசை பேட்ஸ்மேனுக்காக பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு, மனீஷ் பாண்டே, ரஹானே, ரெய்னா உள்ளிட்ட பலர் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர். 

உலக கோப்பைக்கு முன் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், நியூசிலாந்து தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடியதை அடுத்து ராயுடுதான் உலக கோப்பையில் இந்திய அணிக்கான நான்காம் வரிசை பேட்ஸ்மேன் என்று கேப்டன் கோலியே வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அணி நிர்வாகமும் அந்த மனநிலையில் தான் இருந்தது. 

ஆனால் கடைசி நேரத்தில், உலக கோப்பைக்கு முந்தைய ஆஸ்திரேலிய தொடரில் விஜய் சங்கர், பேட்டிங், பவுலிங் என இரண்டு வகையிலும் பங்களிப்பு செய்ததையடுத்து, அவரை உலக கோப்பையில் அணியில் எடுத்தது தேர்வுக்குழு.

ராயுடுவுக்கு உலக கோப்பை அணியில் இடமிருக்கிறது என்ற நம்பிக்கையை விதைத்துவிட்டு கடைசியில், ராயுடு புறக்கணிக்கப்பட்டு விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றுவிதத்திலும் பங்களிப்பு செய்வதால், அவரை அணியில் தேர்வு செய்ததாக எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார். 

Also Read - 

இதையடுத்து தனது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படையாக டுவிட்டரில் காட்டினார் ராயுடு. உலக கோப்பையை காண 3டி கண்ணாடியை வாங்கப்போவதாக பதிவிட்டு, விஜய் சங்கர் குறித்த எம்.எஸ்.கே.பிரசாத்தின் கூற்றை கிண்டலடித்திருந்தார். 

இப்படியிருக்கையில், உலக கோப்பையில் தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் காயத்தால் தொடரிலிருந்து விலகியபோதிலும் கூட, ராயுடுவை அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருந்தும், அவரை சேர்க்கவில்லை. அதனால் உச்சகட்ட கோபமடைந்த ராயுடு, கிரிக்கெட்டிலிருந்து அதிரடியாக ஓய்வு அறிவித்தார். பின்னர் அதிலிருந்து பின்வாங்கி உள்நாட்டு போட்டிகளில் ஆடிவருகிறார். 

ராயுடு உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்டது கடும் சர்ச்சையானதுடன், எம்.எஸ்.கே.பிரசாத்தும் தேர்வுக்குழுவும் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. 

தனது பதவிக்காலம் முடிந்த நிலையில், அந்த சர்ச்சை சம்பவம் குறித்து பேசியுள்ளார் எம்.எஸ்.கே.பிரசாத். இதுகுறித்து பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், ராயுடுவின் புறக்கணிப்பிற்கு நான் வருந்துகிறேன். எங்கள் கமிட்டி 2016 ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு பிறகு, டெஸ்ட் அணியில் ராயுடு ஆட வேண்டும் என்று விரும்பியது. அதுகுறித்து நானே ராயுடுவிடம் பேசியிருக்கிறேன். ஏன் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்தக்கூடாது என்று கேட்டிருக்கிறேன். பின்னர் அவர் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதால் ஒருநாள் அணியில் அவரை எடுத்தோம். 

Also Read - U19 உலக கோப்பை அரையிறுதி: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபார சதம்.. பாகிஸ்தானை வீழ்த்தி ஃபைனலில் இந்திய அணி

அணியில் எடுத்த பின்னர், அவரது உடற்தகுதியில் கவனம் செலுத்தினோம். ஒரு மாதம் என்சிஏ-விற்கு அனுப்பி அவரை முழு உடற்தகுதி பெற வைத்தோம். இவ்வாறு ராயுடுவுக்கு ஆதரவாக இருந்துள்ளோம். ராயுடுவை உலக கோப்பை அணியில் தேர்வு செய்ய முடியாமல் போனது எனக்கும் வருத்தம் தான் என்று பிரசாத் தெரிவித்தார். 
 

click me!