ஷ்ரேயாஸ் அபார சதம்.. கேஎல் ராகுல் காட்டடி தர்பார்.. நியூசிலாந்துக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Feb 5, 2020, 11:41 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு 348 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

அறிமுக வீரர்கள் பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக இறங்கினர். அறிமுக வீரர்கள் இருவரும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தையே அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். பிரித்வி ஷா 20 ரன்களில் ஆட்டமிழக்க, மயன்க் அகர்வால் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கேப்டன் கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து சிறப்பாக ஆடினர். கோலி வழக்கம்போலவே தனது கிளாசான பேட்டிங்கை ஆடி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே, இஷ் சோதியின் கூக்ளியில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 

இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயருடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் மெதுவாக ஆடிய ஷ்ரேயாஸ், களத்தில் நிலைத்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். கேஎல் ராகுல் களத்திற்கு வந்தது முதலே சீராக ரன்களை சேர்த்தார். 

ராகுல் ஒருமுனையில் சிக்ஸர்களாக விளாசி கொண்டிருக்க, ஷ்ரேயாஸ் ஐயர் பவுண்டரிகளாக விளாசினார். டிம் சௌதி வீசிய 40வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், அடுத்த 2 ஓவர்களிலும் தலா ஒரு பவுண்டரியை அடித்தார். அபாரமாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

ராகுலும் அரைசதம் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 29 ஓவரில் இந்திய அணி 156 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதன்பின்னர் ராகுலின் அதிரடியால் தான் இந்திய அணியின் ஸ்கோர் வேகமெடுக்க ஆரம்பித்தது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக ஆடி சதமடிக்க, ஸ்கோர் உயர்ந்தது. 

சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், சதமடித்த மாத்திரத்திலேயே ஆட்டமிழந்தார். 103 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்து 46வது ஓவரில் வெளியேற, அதன்பின்னர் ராகுலுடன் கேதார் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். கேதர் ஜாதவ் களத்திற்கு வரும்போது, ராகுல் 70 ரன்களை கடந்திருந்ததால், அவருக்கு சதமடிக்கும் வாய்ப்பு இருந்தது. 

ஆனால் அதன்பின்னர் பெரும்பாலான பந்துகளை கேதார் ஜாதவே ஆடியதால், ராகுலால் சதமடிக்க முடியாமல் போனது. ஆனால் ஜாதவ் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சௌதி வீசிய 48வது ஓவரில் கேதார் ஜாதவ் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். அதே ஓவரில் ராகுலும் ஒரு பவுண்டரி விளாச, அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் கிடைத்தது. 

கடைசி 2 ஓவரில் ராகுலும் ஜாதவும் இணைந்து 21 ரன்கள் அடித்தனர். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது. ராகுல் 64 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 88 ரன்களை விளாசி களத்தில் இருந்தார். கேதார் ஜாதவ் 15 பந்தில் 26 ரன்கள் அடித்தார். 

நியூசிலாந்து அணி 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டுகிறது. 
 

click me!