சாம்பியன் அணியை வீழ்த்தி புதிய கேப்டனின் கீழ் செம கம்பேக் கொடுத்த தென்னாப்பிரிக்கா.. குயிண்டன் டி காக் அபார சதம்

By karthikeyan VFirst Published Feb 5, 2020, 10:07 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 
 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து ஒருநாள் தொடர் தொடங்கி நடந்துவருகிறது. 

முதல் ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. உலக கோப்பை படுதோல்வி, அதற்கு பின்னரும் தொடர் தோல்விகளை தழுவிவந்த தென்னாப்பிரிக்க அணி, இந்த தொடரிலிருந்து டுப்ளெசிஸை நீக்கிவிட்டு குயிண்டன் டி காக்கை கேப்டனாக நியமித்தது. 

குயிண்டன் டி காக்கின் தலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, உலக கோப்பையை வென்ற சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜோ டென்லி மட்டுமே நன்றாக ஆடினார். மற்றவர்கள் பெரியளவில் பங்களிப்பு செய்யவில்லை. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் முறையே 32 மற்றும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் ஜோ ரூட் 17 மற்றும் கேப்டன் இயன் மோர்கன் 11 ரன்களிலும் அவுட்டாகினர். இதையடுத்து களத்திற்கு வந்த ஜோ டென்லி பொறுப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டென்லி ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் டாம் பாண்ட்டன்(18), சாம் கரன்(7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

டென்லியுடன் இணைந்து கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய வோக்ஸ் 40 ரன்கள் அடித்தார். டென்லி-வோக்ஸ் ஜோடி 91 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடி அரைசதமடித்து, சதத்தை நெருங்கிய டென்லி, கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 50 ஓவரில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்தது.

259 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக்கும் ரீஸா ஹென்ரிக்ஸும் களமிறங்கினர். ஹென்ரிக்ஸ் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெம்பா பவுமா, டி காக்குடன் ஜோடி சேர்ந்தார். முதல் விக்கெட்டை எளிதாக வீழ்த்திவிட்ட இங்கிலாந்து அணியால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 

டி காக்கும் பவுமாவும் இணைந்து சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், அதன்பின்னரும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடினர். தெளிவாகவும் பொறுப்புடனும் ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக், சதமடித்தார். சதமடித்த டி காக் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிய பவுமா, 98 ரன்களில் ஆட்டமிழந்து 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். இவர்கள் இருவரும் பொறுப்புடனும் சிறப்பாகவும் ஆடியதால் தென்னாப்பிரிக்காவின் வெற்றி எளிதானது. அதனால் 48வது ஓவரிலேயே இலக்கை எட்டி தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டி காக் தேர்வு செய்யப்பட்டார். 

click me!