ராயுடுவை தூக்கிப்போட்டு விஜய் சங்கரை எடுத்தது ஏன்..? இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Apr 16, 2019, 10:59 AM IST
Highlights

4ம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்களை யார் பிடிக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாக இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித், தவான், தோனி, ராகுல், கேதர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகிய வீரர்கள் ஏற்கனவே உறுதியான ஒன்று. 

4ம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்களை யார் பிடிக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்காம் வரிசையில் ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு உள்ளிட்ட பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில் ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து சீராக ஆடாததால் அவருக்கான இடத்தை அவரே தவறவிட்டார். 

இதற்கிடையே மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடினார். சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதோடு அவ்வப்போது பெரிய ஷாட்டுகளையும் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிராக மிடில் ஆர்டரில் அவரது பொறுப்பான பேட்டிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்தார். 

பேட்டிங், பவுலிங்கை கடந்து விஜய் சங்கர் நல்ல ஃபீல்டரும் கூட. அந்தவகையில் ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கரை எடுப்பது அனைத்து வகையிலும் இந்திய அணிக்கு வலு சேர்க்கும் என்பதால் நான்காம் வரிசைக்கு விஜய் சங்கர் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். இதே விஷயத்தை நமது ஏசியாநெட் தமிழ் தளத்திலும் எழுதியிருந்தோம். 

அதேபோலவே ராயுடு ஓரங்கட்டப்பட்டு விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், அம்பாதி ராயுடு - விஜய் சங்கர் விஷயத்தில் ராயுடுவை ஏன் எடுக்கவில்லை என்பதற்கு பதிலாக விஜய் சங்கரை ஏன் எடுத்தோம் என்பதுதான் முக்கியமான விஷயம். தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் ராயுடுவை விட விஜய் சங்கர் தான் சரியான தேர்வு. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே சிறப்பாக செயல்படக்கூடிய முப்பரிமாண வீரர் அவர். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் அணிக்கு தேவைப்படும்போது பவுலிங்கும் வீசக்கூடியவர். விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்திய அணிக்கு 7 பவுலிங் ஆப்சன் உள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய் சங்கர் சிறந்த ஃபீல்டர். இவ்வாறு இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். அண்மைக்காலத்தில் ராயுடுவை விட சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்துள்ளார் விஜய் சங்கர். இதுதான் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட காரணம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார். 
 

click me!