4 பேட்ஸ்மேன்கள், 6 பவுலர்கள்.. இந்திய டெஸ்ட் அணியின் மாற்று வீரர்கள் பட்டியல்

By karthikeyan VFirst Published Jan 3, 2020, 2:23 PM IST
Highlights

இந்திய டெஸ்ட் அணிக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் 4 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்கள் என மொத்தம் 10 வீரர்கள் இருக்கின்றனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சுகிறது. 2019ல் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்கவில்லை. கடந்த ஆண்டில் ஆடியதில் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மட்டும் டிரா ஆனது. அதைத்தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான 3 தொடர்களையும் முழுமையாக வென்று 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது இந்திய அணி.

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறந்த அணியாக தலைசிறந்து விளங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, தொடக்க வீரராக முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்தார். அதன்பின்னர் இரட்டை சதமும் விளாசி தனக்கான இடத்தை நிரந்தரமாக்கிவிட்டார். மற்றொரு தொடக்க வீரராக மயன்க் அகர்வாலும் அசத்தலாக ஆடிவருகிறார். 

புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா என பேட்டிங் ஆர்டர் வலுவாகவுள்ளது. அஷ்வின், ஜடேஜா என்ற இரண்டு அனுபவம் வாய்ந்த மற்றும் பேட்டிங் ஆடக்கூடிய ஸ்பின் பவுலர்கள் உள்ளனர். ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் மிரட்டலாக உள்ளது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என அனைத்து வகையான பந்துகளையும் வீசக்கூடிய பவுலிங் யூனிட் உள்ளது. 

தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அடுத்துவரும் புதிய தேர்வுக்குழுவிற்கு, எதிர்கால மற்றும் மாற்று வீரர்களை தேர்வு செய்வதற்கு ஏதுவாக, பிரசாத்தின் பதவிக்காலத்தில் தேர்வுக்குழு நன்கு கண்காணித்து தேர்வு செய்து வைத்திருக்கும் மாற்று வீரர்கள் பட்டியல் கேட்கப்பட்டிருந்தது. 4 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்கள் கொண்ட பட்டியலை பிரசாத் தேர்வு செய்துள்ளார். 

ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகியோருக்கு மாற்றாக ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரர்களாக இறங்கிய கேஎல் ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகியோருடன், கடந்த ரஞ்சி சீசனில் சிறப்பாக ஆடி அதிக ரன்களை குவித்த டாப் 2 வீரர்களான அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் பிரியங்க் பன்சால் ஆகிய இருவரையும் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. 

மாற்று ஃபாஸ்ட் பவுலர்களாக நவ்தீப் சைனி, அவேஷ் கான், சந்தீப் வாரியர், பாசில் தம்பி, இஷான் போரெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. 
 

click me!