வங்கதேச வீரர்கள் ஆங்கிலமே தெரியாத தர்க்குறியா இருக்காங்க.. நான் என்னதான் பண்றது..? விரக்தியின் உச்சத்தில் கிப்ஸ்

By karthikeyan VFirst Published Jan 3, 2020, 12:06 PM IST
Highlights

வங்கதேச வீரர்களுக்கு ஆங்கிலமே தெரியவில்லை என்றும் அதனால் தனது ஆலோசனைகளை அவர்களுக்கு சரியாக கொண்டுசேர்க்க முடியவில்லை என்றும் சில்ஹெட் தண்டர் அணியின் தலைமை பயிற்சியாளர் கிப்ஸ் வேதனை தெரிவித்துள்ளார். 
 

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல வங்கதேசத்தில் வங்கதேச பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. நடப்பு சீசனில் சில்ஹெட் தண்டர் அணி, லீக் சுற்றில் 9 போட்டிகளில் ஆடி ஒரே ஒருயொரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

மொசாடெக் ஹுசைன் தலைமையிலான அந்த அணி படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை தழுவிவருகிறது. இந்நிலையில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி வீரர் ஹர்ஷல் கிப்ஸ், வங்கதேசத்தில் உள்ள உள்ளூர் வீரர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. எனவே அவர்களுக்கு எனது ஆலோசனையை சரியாக புரிய வைக்க முடியவில்லை. நான் பேசுவதை கூர்ந்து கவனிக்கின்றனர். ஆனால் நான் சொன்னதுபோல் அவர்கள் செயல்படுவதில்லை. அது, எனக்கு மிகுந்த விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. 

ஆட்டத்தின் மீதான வீரர்களின் புரிதல் இன்னும் மேம்பட வேண்டும். இன்னொரு பிரச்னை என்னவென்றால், பொறுமையும் நிதானமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். நான் சொல்வதை அவர்களால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. 

ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் கேளுங்கள்.. தொடக்க வீரராக ரூபெல் மியா, ஒரு போட்டியில் 28 பந்தில் வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். டைம் அவுட் பிரேக்கில் களத்திற்கு சென்ற நான், என்ன நடக்கிறது? 28 பந்துக்கு 14 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறாயே? என்று கேட்டேன். அதற்கு அவர், நான் என்ன சொல்கிறேன் என்றே புரியாமல் தலையை ஆட்டிக்கொண்டு நின்றார் என்று தெரிவித்தார். 
 

click me!