அவுட் இல்லைனு அடம்பிடித்த ஷுப்மன் கில்.. பயந்துபோன அம்பயர்.. பந்துவீச மறுத்து களத்தை விட்டு வெளியேறிய டெல்லி வீரர்கள்.. பெரும் சர்ச்சை

By karthikeyan VFirst Published Jan 3, 2020, 12:55 PM IST
Highlights

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் கடும் சர்ச்சையான சம்பவம் ஒன்று அரங்கேறி, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 
 

முதல் தர போட்டியான ரஞ்சி தொடர் நடந்துவருகிறது. இன்று தொடங்கி நடந்துவரும் பல போட்டிகளில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியும் ஒன்று. நிதிஷ் ராணா தலைமையிலான டெல்லி அணியும் மந்தீப் சிங் தலைமையிலான பஞ்சாப் அணியும் ஆடிவருகின்றன. 

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர் சன்வீர் சிங் டக் அவுட்டானார். ஷுப்மன் கில் 23 ரன்களிலும், சிறப்பாக அடி அரைசதம் அடித்த குர்கீரத் சிங் மன் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் மந்தீப் சிங்கும் அன்மோல்ப்ரீத் சிங்கும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். 

இந்த போட்டியில் ஷுப்மன் கில்லின் அத்துமீறலால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. முகமது ரஃபி என்ற அம்பயர், இந்த போட்டியில் முதன்முறையாக அம்பயரிங் செய்துவருகிறார். அவருக்கு இதுதான் அறிமுக போட்டி. ஷுப்மன் கில்லுக்கு அவர் விக்கெட் கீப்பிங் கேட்ச் என்று அவுட் கொடுத்தார். ஆனால் அம்பயரின் முடிவால் அதிருப்தியடைந்த ஷுப்மன் கில், களத்தை விட்டு வெளியேற மறுத்து, அறிமுக அம்பயர் முகமது ரஃபியுடன் வாக்குவாதம் செய்தார். 

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், அவுட் முடிவை திரும்பப்பெற்று ஷுப்மன் கில் ஆட அனுமதிக்கப்பட்டார். ஷுப்மன் கில்லின் செயல்பட்டாலும், அவர் மறுபடியும் பேட்டிங்கை தொடர அனுமதிக்கப்பட்டதாலும் கடும் அதிருப்தியடைந்த டெல்லி அணி வீரர்கள், பந்துவீச மறுத்து களத்தை விட்டு வெளியேறினர். உடனடியாக போட்டியின் ரெஃப்ரி தலையிட்டு பேசி, பிரச்னையை முடித்துவைத்தார். அதன்பின்னரும் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில், இந்த சம்பவம் நடந்து சிறிது நேரத்திலேயே மீண்டும் ஆட்டமிழந்தார். 

அறிமுக அம்பயரை அச்சுறுத்தும் விதமாக கில் நடந்துகொண்டது மிகப்பெரிய தவறு. இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!