
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவருகிறார். அதிலும் அவரது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டார். இந்த சீசனுக்கு முன்பாகவே அவர் சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டதால், புதிய கேப்டன் ஜடேஜா தான் இந்த சீசனில் சிஎஸ்கேவை கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார்.
ஜடேஜாவின் கேப்டன்சியில், இந்த சீசன் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கமாக அமையவில்லை. முதல் 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆனால் கேப்டன்சியிலிருந்து விலகிய தோனியின் ஆட்டம் அபாரமாக உள்ளது. கேகேஆருக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த தோனி, லக்னோவிற்கு எதிரான 2வது போட்டியில் சிறிய கேமியோ ரோல் செய்தார். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், மின்னல்வேகத்தில் ஒரு ரன் அவுட் செய்து தனக்கு வயது வெறும் நம்பர் தான் என்று காட்டிய தோனி, நேர்மையாக நடந்துகொண்ட செயலும் கவனம் ஈர்த்தது.
பஞ்சாப் இன்னிங்ஸின் 8வது ஓவரை ப்ரிட்டோரியஸ் வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட லியாம் லிவிங்ஸ்டோன், ஒரு பந்தை பின்பக்கமாக தட்டிவிட முயல, அதை விக்கெட் கீப்பர் தோனி செமயா தாவிக்குதித்து கேட்ச் பிடித்தார். ஆனால், அதை சரியாக பிடித்துவிட்ட திருப்தியில்லாத தோனி, அதை கொண்டாடாமல், அம்பயரிடம் அது முறையாக பிடிக்கப்பட்ட கேட்ச் தானா என பரிசோதிக்குமாறு கூறினார். அதை பரிசோதித்த போது லிவிங்ஸ்டோன் அவுட்டில்லை என்பது தெரிந்தது. தோனியின் இந்த நேர்மையான செயலை கண்டு ரசிகர்கள் விதந்தோதி வருகின்றனர்.
அதேவேளையில், தோனி பேட்டிங் ஆடியபோது ராகுல் சாஹர் வீசிய பந்தை தோனி அடிக்க முயல, பேட்டில் எட்ஜ் ஆன பந்தை விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா கேட்ச் பிடித்துவிட்டார். தோனிக்கு பந்து பேட்டில் பட்டிருந்தால் நன்றாக தெரிந்திருக்கும். அம்பயர் அவுட் கொடுக்காத நிலையில், தோனி களத்திலேயே நின்றார். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா அதை உறுதியாக அவுட் என நம்பியதால் ரிவியூ எடுக்க சொன்னார். ரிவியூவில் தோனியின் பேட்டில் பந்து எட்ஜ் ஆனது தெரிந்தது. எனவே தோனி அவுட்.
தோனிக்கு எட்ஜ் ஆனது தெரிந்திருந்தால் அவராகவே வெளியேறியிருக்கலாம் என்று கூறலாம். ஆனால் அதற்கான அவசியமில்லை. அவரது அணியே அந்த நேரத்தில் முக்கியம். எனவே அந்தளவிற்கு நேர்மையை எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை எட்ஜ் ஆனது அவருக்கே கூட தெரியாமல் இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் தோனிக்கு முட்டுக்கொடுக்கலாம்.