
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் - ஷைலா மெர்ச்சன்ட்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட்க்கும் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 1 ஆம் தேதி ப்ரீ வெட்டிங் ஷூட் நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக தொடங்கியது.
இந்த ப்ரீ வெட்டிங் போட்டோஷுட் நிகழ்ச்சியே 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமே உலகில் பணக்காரர்கள், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் என்று ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிலும், பில்கேட்ஸ், மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜூக்கர்பெர்க், கிரிக்கெட் பிரபலங்கள் என்று சர்வதேச பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் டவுன்ஷிப் அருகே உள்ள ஜோக்வாட் கிராமத்தில் 'அன்னதான சேவையுடன் தொடங்கியது. இந்த நிலையில், இந்த ப்ரீ வெட்டிங் ஷூட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி, சாக்ஷி தோனி, ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், ஜாகீர்கான், ஹர்திக் பாண்டியா, டுவைன் பிராவோ, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், குர்ணல் பாண்டியா, ரஷீத் கான், சாம் கரண், க்ரீம் ஸ்மித் என்று ஏராளமான பிரபலங்கள் குஜராத்திற்கு நேற்று பிற்பகல் முதலே வந்த வண்ணம் இருந்தனர்.
இதில், விராட் கோலியும் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வந்துள்ளனர். கடந்த 1 ஆம் தேதி இரவு தொடங்கிய அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் ஃபோட்டோஷூட் நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் பிளாக் அண்ட் பிளாக் லுக்கில் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தான், எம்.எஸ்.தோனி, சாக்ஷி மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இணைந்து தாண்டியா டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படமும் வைரலானது. மேலும், தெலுங்கு நடிகர் ராம் சரண் உடன் இணைந்து தோனி நடந்து வரும் வீடியோவும் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் டிரெண்ட் போல்ட், டிம் டேவிட், போலார்டு, ஜாகீர்கான், ரஷீத் கான் என்று ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.