Shahrukh Khan-ன் லாஸ்ட் பால் சிக்ஸரை டிவியில் பார்த்து ரசித்த தோனி..! சிஎஸ்கேவில் தட்டி தூக்க தல திட்டம்

By karthikeyan VFirst Published Nov 22, 2021, 5:54 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் ஃபைனலில் கர்நாடகாவுக்கு எதிராக கடைசி பந்தில் ஷாருக்கான் சிக்ஸர் அடித்து முடிந்த காட்சியை டிவியில் நேரலையில் தோனி பார்த்து ரசித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

தமிழகத்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான ஷாருக்கான், மீண்டுமொரு முறை தமிழக அணிக்காக போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்துள்ளார். விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி டிராபி என உள்நாட்டு தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருபவர் ஷாருக்கான்.

தமிழ்நாடு அணியின் ஃபினிஷராக திகழும் ஷாருக்கானை, ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் ரூ.5.25 கோடிக்கு எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஆனால் ஷாருக்கானுக்கு அனைத்து போட்டிகளிலும் அந்த அணி வாய்ப்பளிக்கவில்லை. கிடைத்த சில வாய்ப்புகளில் சிறப்பாக ஆடி பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக முடித்து கொடுத்தார் ஷாருக்கான். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அருமையாக ஆடியிருந்தார்.

ஷாருக்கானின் பேட்டிங்கை பார்க்கையில் அப்படியே பொல்லார்டை பார்ப்பது போல் இருப்பதாக அனில் கும்ப்ளே, வீரேந்திர சேவாக் ஆகிய ஜாம்பவான்கள் பாராட்டியிருந்தனர்.

அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ள நிலையில், உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார் ஷாருக்கான். கர்நாடகா அணிக்கு எதிராக இன்று நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணி, 20 ஓவரில் 151 ரன்கள் அடிக்க, 152 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணி,  17.1 ஓவரில் 116 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட, முழு பொறுப்பும் மீண்டுமொருமுறை ஷாருக்கான் மேல் இறங்கியது.

தமிழ்நாடு அணி முழுக்க முழுக்க ஷாருக்கானை மட்டுமே நம்பியிருக்க, 17வது ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்து நம்பிக்கைக்கு உரமூட்டிய ஷாருக்கான், கடைசிவரை போட்டியை எடுத்துச்சென்றார். கடைசி 2 ஓவரில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட, 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடித்த ஷாருக்கான், இன்னிங்ஸின் கடைசி பந்தில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட, சிக்ஸர் விளாசி போட்டியை முடித்தார். ஷாருக்கானின் கடைசி பந்து சிக்ஸரால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது. 

இந்த போட்டியை ஜாம்பவானும் சிஎஸ்கே கேப்டனுமான தோனி டிவியில் பார்த்து ரசித்தார். ஷாருக்கான் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்துவைத்ததை தோனி டிவியில் பார்த்து ரசித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதேபோல் பலமுறை சிக்ஸர் அடித்து போட்டியை முடித்துவைத்து உலகின் தலைசிறந்த ஃபினிஷர் என்று பெயர்பெற்ற தோனி, ஷாருக்கான் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்ததை டிவியில் பார்த்து ரசித்தார்.

அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ள நிலையில் ஷாருக்கானின் ஃபினிஷிங்கை சிஎஸ்கே கேப்டன் தோனி டிவியில் பார்த்திருப்பது, சிஎஸ்கே அணியில் ஷாருக்கானுக்கான வாய்பிருப்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
 

click me!