சென்னை மண்ணில் தங்கள் கெரியரின் முடிவுரையை எழுதிய சென்னையின் செல்லப்பிள்ளைகள்..! தமிழக ரசிகர்கள் நெகிழ்ச்சி

By karthikeyan VFirst Published Aug 15, 2020, 9:28 PM IST
Highlights

தோனியின் ஓய்வு குறித்த விவாதம் ஓராண்டாக நடந்துவரும் நிலையில், தனது ஓய்வு அறிவிப்பை தன்னை செல்லப்பிள்ளையாக கொண்டாடிய சென்னை மண்ணில் அறிவித்தார் தோனி. அவரைத்தொடர்ந்து சென்னையின் மற்றொரு செல்லப்பிள்ளையான ரெய்னாவும் ஓய்வு அறிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் தோனி ஒரு சகாப்தம். கங்குலி தலைமையிலான இந்திய அணியில் 2004ம் ஆண்டு அறிமுகமான தோனி, 2007ம் ஆண்டே இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். கேப்டன் பொறுப்பை ஏற்ற பின்னர் நடந்த முதல் பெரிய தொடரான 2007 டி20 உலக கோப்பையை, இளம் இந்திய அணியை கொண்டு வென்றார். அதன்பின்னர் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. 

தோனிக்கு இந்திய அணியுடன் எவ்வளவு தொடர்பும் நெருக்கமும் இருக்கிறதோ, அதற்கு சற்றும் குறைந்திடாத அளவுக்கு சிஎஸ்கே அணியுடனும், தமிழ்நாட்டு ரசிகர்களுடனும் தோனிக்கு உள்ளது. சிஎஸ்கே அணியை ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற வைத்த கேப்டன் தோனி, 8 முறை ஃபைனலுக்கு முன்னேறவைத்து, 3 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 

கேப்டன் தோனிக்கு இந்திய அணியிலும், சிஎஸ்கே அணியிலும், அவரது தளபதியாக திகழ்ந்தவர் ரெய்னா. சிஎஸ்கே தடையில் இருந்த 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் இருவரும் சிஎஸ்கே அணியில் தான் ஆடிவருகின்றனர். தோனியை தல என்றழைக்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள், ரெய்னாவை சின்ன தல என்றழைக்கின்றனர். அந்தளவிற்கு இருவரும் சென்னையின் செல்லப்பிள்ளைகள்.

தோனி பிறந்தது வேண்டுமானால் ராஞ்சியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு அவரது சொந்த மண்ணைவிட அதிகமான அன்பை வாரி வழங்கியது சென்னை மண் தான். சென்னை தனது தாய்வீடு என்பதை தோனி பலமுறை தெரிவித்திருக்கிறார். அதேபோலத்தான் ரெய்னாவும். இருவருமே தமிழ் ரசிகர்களின் பேரன்பையும் பேராதரவையும் பெற்றவர்கள். 

சென்னை செண்டிமெண்ட்டில், இருவருமே தங்களது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை சென்னை மண்ணிலேயே வெளியிட்டுள்ளனர். ஐபிஎல் முன் தயாரிப்புக்காக சென்னையில் பயிற்சி முகாமில் இருக்கும் தோனியும், ரெய்னாவும் சென்னை மண்ணிலேயே தங்களது சர்வதேச கிரிக்கெட் கெரியரின் முடிவுரையை எழுதியுள்ளனர். இவர்களது செயல், தமிழ்நாட்டு ரசிகர்களை நெகிழவைத்துள்ளது.
 

click me!