அடுத்தடுத்த அதிர்ச்சி.. தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

By karthikeyan VFirst Published Aug 15, 2020, 8:56 PM IST
Highlights

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான முன் தயாரிப்பாக சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சி முகாமின் முதல் நாளான இன்றைய தினமே, அடுத்தடுத்த அதிர்ச்சிகள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஓராண்டாகவே தோனியின் ஓய்வு குறித்த விவாதம் ஹாட் டாபிக்காக இருந்து வந்த நிலையில், அவர் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரைத்தொடர்ந்து அவரது ஆஸ்தான வீரரான சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். 

2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ரெய்னா, கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரர். தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் ரெய்னா. தோனியின் வலதுகரமாக திகழ்ந்தார் என்றே கூற வேண்டும். இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களை குவித்துள்ள ரெய்னா, 18 டெஸ்ட் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 

2011ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியில் முக்கிய பங்காற்றியவர் ரெய்னா. குறிப்பாக முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் அபாரமாக ஆடினார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்த ரெய்னா, அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடினார். அவரது இந்த இரண்டு சிறப்பான இன்னிங்ஸ்களும் தான் இந்திய அணி, இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு காரணமே.

ஃபீல்டிங்கிலும் மிரட்டக்கூடியவர். ஜாண்டி ரோட்ஸுக்கே பிடித்த ஃபீல்டர் ரெய்னா. ஆனாலும் ரெய்னா 2017க்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்திய ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் சிக்கல் இருந்த நிலையில், 2019 உலக கோப்பைக்கான மிடில் ஆர்டரி பேட்ஸ்மேனை தேடும் முயற்சியில், ரெய்னாவுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 2018ல் ஆடிய தொடரை ரெய்னா சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அத்துடன் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, அதன்பின்னர் இதுவரை இந்திய அணியில் மீண்டும் நுழைய முடியவில்லை. 

இந்நிலையில், இன்று தோனியை தொடர்ந்து யாருமே எதிர்பார்த்திராத நேரத்தில், திடீரென ஓய்வு அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஓய்வு பெற்றிருப்பதால், ஐபிஎல் போட்டிகளில் ஆடுவார்கள்.  
 

click me!