#ENGvsIND கபில் தேவுக்கு அடுத்த 2வது இந்திய ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ்..! லண்டன் லார்ட்ஸில் தரமான சாதனை

By karthikeyan VFirst Published Aug 17, 2021, 4:26 PM IST
Highlights

கபில் தேவுக்கு பிறகு லண்டன் லார்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை முகமது சிராஜ் சாதனை படைத்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்தது. இந்த போட்டி டெஸ்ட் வரலாற்றில் என்றும் நினைவில் இருக்கக்கூடிய போட்டியாக அமைந்தது. 

இந்திய அணி தொடக்க வீரர்களில் அபாரமான தொடக்கம், ஜோ ரூட்டின் சிறந்த இன்னிங்ஸ்(180*), ஷமி - பும்ரா பார்ட்னர்ஷிப்(9வது விக்கெட்டுக்கு 89*), இரு அணி வீரர்களுக்கு இடையேயான மோதல் என மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் வெற்றி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் 3வது டெஸ்ட் வெற்றி. இதற்கு முன் 1986 மற்றும் 2014 ஆகிய 2 முறை மட்டுமே இந்தியா லார்ட்ஸில் வென்றிருக்கிறது. அதன்பின்னர் 3வது முறையாக இப்போதுதான் வெற்றி பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட்டில் இந்திய அணி பல அபாரமான சாதனைகளையும், இங்கிலாந்து அணி மோசமான சாதனைகளையும் படைத்தது. இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 9வது விக்கெட்டுக்கு சிறந்த பார்ட்னர்ஷிப் ஷமி - பும்ரா அடித்த 89* ரன்கள் தான். அதேவேளையில், இங்கிலாந்து அணியோ டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்தது. இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவருமே ஒரே இன்னிங்ஸில் டக் அவுட்டானது இதுவே முதல் முறை. 2வது இன்னிங்ஸில் ரோரி பர்ன்ஸும், டோமினிக் சிப்ளியும் பும்ரா மற்றும் ஷமியின் அடுத்தடுத்த ஓவர்களில் டக் அவுட்டாகினர்.

இந்த போட்டியில் மற்றொரு தரமான சம்பவம் என்றால், அது முகமது சிராஜ் செய்ததுதான். இந்திய அணிக்கு ஃபாஸ்ட் பவுலிங்கில் மிகுந்த நம்பிக்கையளிக்கிறார் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ். அபாரமாக பந்துவீசி, இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் தலா 4 விக்கெட்டுகள் என மொத்தமாக 8 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய பவுலர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்துள்ளார். இதற்கு முன் 1982ல் முன்னாள் கேப்டன் கபில் தேவ் லார்ட்ஸில் 8 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அதன்பின்னர், 39 ஆண்டுகள் கழித்து இப்போது சிராஜ் தான் 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதற்கிடைப்பட்ட காலத்தில் வேறு எந்த இந்திய பவுலரும் லார்ட்ஸ் டெஸ்ட்டில் 8 விக்கெட் வீழ்த்தியதில்லை.

இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசினார் சிராஜ். சிராஜ் வீசிய ஒவ்வொரு பந்துமே விக்கெட் வீழ்த்துவதை போலவே இருந்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை எந்த சூழலிலும் ஓய்வே எடுக்கவிடாமல் ரிலாக்ஸே செய்யவிடாமல் சிராஜ் நெருக்கடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!