Shane Warne: டி20 கிரிக்கெட்டில் எந்த கேப்டனும் செய்யாததை செய்தவர் ஷேன் வார்ன்.! புத்திசாலி என கைஃப் புகழாரம்

Published : Mar 05, 2022, 08:45 PM IST
Shane Warne: டி20 கிரிக்கெட்டில் எந்த கேப்டனும் செய்யாததை செய்தவர் ஷேன் வார்ன்.! புத்திசாலி என கைஃப் புகழாரம்

சுருக்கம்

டி20 கிரிக்கெட்டில் எந்த கேப்டனும் செய்யாததை செய்துகாட்டியவர் ஷேன் வார்ன் என்றும், அவர் மிகச்சிறந்த புத்திசாலி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் முகமது கைஃப்.  

ஆஸ்திரேலிய அணியின் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் காலமானார். தாய்லாந்தில் இருந்த ஷேன் வார்ன் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தது, கிரிக்கெட் உலகை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டரான ஷேன் வார்னின் இறப்புக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாது உலகளவில் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஷேன் வார்னுடனான அனுபவங்கள், அவரது திறமை, அவரது பண்புகள் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து அவரை நினைவுகூர்ந்துவருகின்றனர்.

அந்தவகையில், ஐபிஎல்லில் ஷேன் வார்னின் கேப்டன்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய முகமது கைஃப், ஷேன் வார்னின் கேப்டன்சி  மற்றும் அவரது தனித்தன்மை ஆகியவை குறித்து பகிர்ந்து, அவரை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டு நடந்த முதல் சீசனில் ஷேன் வார்ன் தலைமையில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தவிர மற்ற அனைத்து அணிகளுமே மிகப்பெரும் ஜாம்பவான்களை பெற்றிருந்தது.

மும்பை இந்தியன்ஸில் சச்சின் - ஜெயசூரியா, சிஎஸ்கேவில் தோனி - முரளிதரன் - மேத்யூ ஹைடன், ஆர்சிபியில் ராகுல் டிராவிட் - ஜாக் காலிஸ் - கும்ப்ளே, டெக்கான் சார்ஜர்ஸில் கில்கிறிஸ்ட் - அஃப்ரிடி - சைமண்ட்ஸ், கேகேஆரில் கங்குலி - பாண்டிங் - அக்தர் என ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 4-5 பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால் ஷேன் வார்ன் தலைமையில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், பிற்காலத்தில் பெரிய வீரர்களாக உருவெடுத்த, ஆனால் அந்த காலக்கட்டத்தில் இளம் வீரர்களாக இருந்த ஜடேஜா, ஷேன் வாட்சன், யூசுஃப் பதான், முனாஃப் படேல் ஆகிய வீரர்களை வைத்துக்கொண்டு முதல் டைட்டிலை அடித்தவர் ஷேன் வார்ன்.

முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் அணி வென்றதற்கு முக்கிய காரணம், ஷேன் வார்ன் தான். பெரிய வீரர்கள் அணியில் இல்லை என்றாலும், இருக்கிற வீரர்களை வைத்துக்கொண்டு, எதிரணிகளுக்கு எதிராக தெளிவான வியூகங்களுடன் சென்று ஒவ்வொரு அணியையும் அடித்து காலி செய்து ஃபைனல் வரை சென்றது மட்டுமல்லாது, ஃபைனலில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியை வீழ்த்தி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார் ஷேன் வார்ன்.

டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற, பெரிய பெரிய வீரர்களை அணியில் பெற்றிருப்பது மட்டுமே முக்கியமல்ல. சிறப்பான களவியூகம், வியூகத்தை களத்தில் சரியாக செயல்படுத்துவது, வீரர்களை திறம்பட கையாண்டு அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவது ஆகியவை தான் முக்கியம் என்பதை, டி20 கிரிக்கெட் அறிமுகமான ஆரம்ப காலத்திலேயே நிரூபித்து காட்டியவர் ஷேன் வார்ன்.

2008 ஐபிஎல்லில் கோப்பையை வென்ற ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய முகமது கைஃப் ஷேன் வார்னை பற்றி பேசியுள்ளார்.

ஷேன் வார்னின் கேப்டன்சி குறித்து பேசியுள்ள முகமது கைஃப், ஷேன் வார்ன் மிகப்பெரிய புத்திசாலி, அட்டாக்கிங் கேப்டன். ஒரு பந்தில் கூட ரிலாக்ஸ் ஆகமாட்டார். ஒரு இன்னிங்ஸின் அனைத்து பந்தையும் சிறப்பானதாகவே வீசுவார். டி20 கிரிக்கெட்டை பற்றி முதல் முறையாக பேசும்போதே, அணியில் இருந்த பவுலர்கள் அனைவரிடமும் ஒவ்வொரு பந்தையும் அவர்களது பெஸ்ட்டாக வீசச்சொன்னதுடன், விக்கெட்டுக்காக பந்துவீசுமாறு கூறினார். அதுதான் அவரது மனநிலையாக இருக்கும். ரன் கொடுக்காமல் பந்துவீச நினைக்காமல் விக்கெட்டுக்காக வீசுமாறு அனைத்து பவுலர்களிடமும் கூறுவார். 

நானும் நிறைய ஐபிஎல் அணிகளில் இருந்திருக்கிறேன். பவுலிங் மீட்டிங்கின்போது, ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவது, ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசுவது, பவுண்டரி கொடுக்காமல் சிங்கிள் கொடுப்பது ஆகியவை குறித்துத்தான் விவாதிக்கப்படும்; அதுதான் பவுலர்களுக்கு அறிவுரையாக வழங்கப்படும். ஆனால் ஷேன் வார்ன் மட்டும் ஒவ்வொரு பந்தையும் விக்கெட்டுக்காக வீசச்சொல்லுவார். அதுதான் போட்டியை வெல்லும் உத்தியாகவே கையாண்டார். மற்ற எந்த கேப்டன்களும் பின்பற்றாத அந்த உத்தியை ஷேன் வார்ன் கையாண்டார் என முகமது கைஃப் தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?