PAK vs ENG: 5வது டி20யில் முகமது ரிஸ்வான் 4வது அரைசதம்! எளிய இலக்கை அடிக்க முடியாமல் தோற்றுப்போன இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Sep 29, 2022, 10:12 AM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 3-2 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றதால் தொடர் 2-2 என சமனில் இருந்தது.

5வது டி20 போட்டி லாகூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷீத், மார்க் உட்.

இதையும் படிங்க - IND vs SA: பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங்; பேட்டிங்கில் ராகுல், சூர்யகுமார் அசத்தல்! முதல் டி20யில் இந்தியா வெற்றி

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஹைதர் அலி, ஆசிஃப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், ஆமீர் ஜமால், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப்.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம்(9), ஷான் மசூத் (7), ஹைதர் அலி (4) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, இஃப்டிகார் அகமது 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆசிஃப் அலி (5), நவாஸ்(0), ஷதாப் கான்(7) என ஒருமுனையில் மற்ற வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் படுமோசமாக சொதப்பி வெளியேற, மறுமுனையில் வழக்கம்போலவே நிலைத்து ஆடி அரைசதம் அடித்து அணியை கரைசேர்த்தார் முகமது ரிஸ்வான்.

அபாரமாக ஆடிய ரிஸ்வான் அரைசதம் அடித்தார். இந்த தொடரில் இது அவரது 4வது அரைசதம் ஆகும். முதல் டி20 போட்டியில் 68 ரன்களும், 2வது போட்டியில் 88 ரன்களும் குவித்த ரிஸ்வான், 4வது போட்டியிலும் 88 ரன்கள் அடித்தார். 5வது டி20 போட்டியில் 46 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். 3வது போட்டியில் மட்டும்தான் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற 4 போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தினார். அவரது அரைசதத்தால் 20 ஓவரில் 145 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணி.

146 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி வீரர்கள், பாகிஸ்தானே பரவாயில்லை எனுமளவிற்கு பேட்டிங் ஆடினார்கள். பின்வரிசையில் மொயின் அலி மட்டும் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்றார். டேவிட் மலான் 37 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். மொயின் அலி கடைசிவரை நின்றும் கூட இங்கிலாந்து அணியால் 20 ஓவரில் 139 ரன்கள் மட்டுமேஅடிக்க முடிந்தது.

இதையும் படிங்க - டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் புவனேஷ்வர் குமாருக்கு ஸ்ரீசாந்த் உருப்படியான அட்வைஸ்

6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3-2 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி 2 டி20 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் தொடரை வென்றுவிடும். ஆனால் இங்கிலாந்து தொடரை வெல்லவேண்டுமென்றால் கடைசி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். கடைசி 2 போட்டிகளில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஆடுவார் என்று தெரிகிறது. அவரது இணைவு அந்த அணிக்கு வலுசேர்க்கும் என்பதால் கடைசி 2 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
 

click me!